ஒழுகும் கட்டடத்தில் அரசு பள்ளி
அலங்காநல்லுார்: சத்திரப்பட்டி அருகே காவனுார் ஊராட்சியில் பழமையான ஒழுகும் ஓட்டுக் கட்டடத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 1971ல் கட்டிய பழமையான ஓட்டுக் கட்டடத்தில் வகுப்புகள் நடக்கின்றன. கட்டடத்தின் ஓடுகள் பராமரிக்கப்படாமல் மழைநீர் ஒழுகுகிறது. ஓடுகளை தாங்கும் மரச் சட்டங்கள், கட்டடம் வலுவிழந்துள்ளது. சமையலறை கட்டடம் சேதமடைந்துள்ளது. இதனருகே 2004ல் கட்டிய சமையலறை கட்டடமும் விரிசல் விட்டுள்ளது. 2024ல் ரூ.8 லட்சத்தில் காலை உணவு திட்ட சமையலறை கட்டப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி, குழாய் வசதிகள் அடிக்கடி பழுதாவது, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால் மாணவர்கள் சிரமப்படுவது தொடர்கிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அச்சுறுத்தும் அபாய ஓட்டுக் கட்டடத்தை அகற்றி புதிய வகுப்பறைகளை கட்ட வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.