ரோடுகளில் குட்கா, புகையிலை, கூல் லிப் தாராளமாக கிடைக்குது: அதிகாரிகளுக்கு தொடருது தலைவலி
மதுரை: மதுரையில்கடைகளில் ரெய்டு நடத்தப்படுவதால், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை டூவீலர்களில் தொடர்வதால் அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது.2023 நவம்பரில் உணவுப் பாதுகாப்புத் துறையினருடன் போலீசார் இணைந்து குழுக்களாக பிரிந்து மதுரை மாவட்டத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் ரெய்டு நடத்தினர். 2024 நவம்பர் வரை 34 ஆயிரத்து 58 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு 4096 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் 'கூல் லிப்' புகையிலை மட்டும் 460 கிலோ பிடிபட்டது. கடைகளில் புகையிலை பொருட்கள் முதல் முறை பிடிபட்டால் ரூ.25ஆயிரம் அபராதத்துடன் 15 நாட்கள் கடை மூடப்படும். இரண்டாம் முறையும் பிடிபட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம், ஒரு மாதம் கடையடைப்பு, 3ம் முறை பிடிபட்டால் ரூ.ஒரு லட்சம் அபராதத்துடன் கடைக்கு 3 மாதம் 'சீல்' வைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் மட்டும் ஓராண்டில் ரூ.ஒரு கோடியே 65 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், 919 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.இதையடுத்து கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை குறைந்துள்ள நிலையில், டூவீலர்களில் விற்பது அதிகரித்துள்ளது என்கிறார் மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சமீபகாலமாக அனுப்பானடி, அண்ணாநகர், ஆரப்பாளையம், ஆனையூர், புதுார் பகுதிகளில் டூவீலர்களில் புகையிலை பொருட்கள்விற்பதைகண்டறிந்தோம். வாடிக்கையாளர்களிடம் அதிகாலையில் குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி டூவீலர்களில் சென்று விற்கின்றனர். முதல் முறை பிடிபடும் போது ரூ.25ஆயிரம் விதிக்கிறோம். இவர்கள் விற்பனை செய்வது ஓரிடம், கடை இருப்பது வேறிடமாக உள்ளது.கலெக்டர் சங்கீதா உத்தரவுபடிபுகையிலை பொருட்களை விற்பவர்கள் கடை வைத்திருப்பதையும் கண்டுபிடிக்கிறோம். அவர்களது பெயர், அலைபேசி எண்ணுடன் துறை மூலம் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை சரிபார்த்து கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கிறோம். ரோடுகளில் யாராவது புகையிலை பொருட்கள் விற்பது தெரிந்தால் டூவீலர் எண்ணுடன் 94440 42322 வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் செய்யலாம் என்றார்.