| ADDED : நவ 02, 2024 05:04 AM
மதுரை: மதுரை நெல்பேட்டை பகுதியில் வைகை ஆற்று கரையோரம் குவிக்கப்பட்ட இறைச்சிக் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசியது. வாகன ஓட்டிகள் வாந்தி எடுக்காத குறையாக அந்த பகுதியை கடந்து சென்றனர். தொடர்ந்து புகார் வர வந்ததால் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்றிய மாநகராட்சி, 5 இறைச்சி கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தது.தீபாவளி பண்டிகை நேற்று (அக். 31) கொண்டாடப்பட்ட நிலையில் நகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இந்நிலையில் நெல்பேட்டை பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் விற்கப்பட்ட கோழி, ஆடு, மாடுகளின் 50 டன் இறைச்சிக் கழிவுகள் வைகையாற்று கரையோரங்களில் மலை போல் குவித்து வைக்கப்பட்டது. இறைச்சிக் கழிவுகள் கெட்டுபோனதுடன் அதிலிருந்து வெளியேறிய கழிவுநீரோடு மழைநீரும் சேர்ந்து ரோட்டில் ஓடியதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல முடியாத அளவு கடும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்த மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். பின் மண் அள்ளும் இயந்திரம் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டு 'பிளீச்சிங் பவுடர்' தெளிக்கப்பட்டது. இறைச்சிக் கழிவுகளை கொட்டிய 5 கடைகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். கடைகளுக்கு 'சீல்'
அவர் கூறியதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் வைகையாற்று கரையோர ரோடுகளில் இறைச்சிக் கழிவுகளை கொட்டினால் முதற்கட்டமாக அபராதமும், எச்சரிக்கையும் விடுக்கப்படும். அதை மீறியும் கொட்டினால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும். மாநகராட்சிப் பணியாளர்களின் நலன் கருதி இறைச்சிக் கழிவுகளை அதற்கென தனியாக உள்ள கழிவு அகற்றும் குப்பைதொட்டிகளில் போட வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நெல்பேட்டை பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை கண்காணிக்க 38 கேமராக்களும், வைகையாற்று கரையோர பகுதிகளில் குப்பை கொட்டும் பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு 100 ஏ.ஐ., தொழில்நுட்ப கேமராக்களும் அமைக்கப்பட உள்ளது என்றார்.