மதுரை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் உள்ளனர் சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தகவல்
மதுரை: ''மதுரை அரசு மருத்துவமனை புதிய அறுவை சிகிச்சை வளாக அரங்கில் போதுமான டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு போதிய புரிதல் இல்லாதது. மருத்துவமனையில் 510 டாக்டர்கள் உள்ளனர்'' என சுகாதார அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.திருப்பாலை தாகூர் நகரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட ரூ.17 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி, ஊரகப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 31 புதிய கட்டடங்களை அமைச்சர்கள் சுப்ரமணியன், மூர்த்தி திறந்து வைத்தனர். அமைச்சர் சுப்ரமணியன் கூறியதாவது:நான்கரை ஆண்டுகளில் மதுரைக்கு மட்டும் ரூ.468.85 கோடி மதிப்பில் மருத்துவ கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 16 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. ரூ.1.86 கோடி மதிப்பில் கூடுதல் பணிகள் நடக்கின்றன. ரூ.132 கோடி மதிப்பில் திட்டங்களை அறிவிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.திருமங்கலம் ஓமியோபதி மருத்துவ கல்லுாரிக்காக ரூ.70 கோடியில் கட்ட திட்டமிட்டு தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அருகே 5 ஏக்கர் இடம் தேர்வு செய்து சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் துவங்கும். மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவுக்கு கூடுதலாக ரூ.20 கோடி ஒதுக்கி, கூடுதலாக 3 தளங்கள் கட்டப்படும்.மதுரை அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை வளாகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது தனி மருத்துவமனை அல்ல. இங்கு மட்டும் 510 டாக்டர்கள் உள்ளனர். பாழடைந்த கட்டடங்களுக்கு பதிலாக புதிதாக கட்டும்போது, புதிய டாக்டர்களை நியமிக்க மாட்டார்கள். அதை பராமரிக்க கூடுதலாக 47 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நாமக்கல்லில் சிறுநீரக திருட்டு தொடர்பாக விசாரணை நடக்கிறது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் பெறும் உறுப்புகள், தானம் அளிப்பவர்களின் உறுப்புகள் என எதை விற்றாலும் தண்டிக்கப்படுவர். இது தொடர்பான விசாரணை நடப்பதால் குற்றவாளிகள் தப்ப முடியாது என்றார். கலெக்டர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி பொன்வசந்த், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடேசன், பூமிநாதன் உடனிருந்தனர்.