மாற்று இடத்தில் சிப்காட் அமைக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: கரூர் மாவட்டம் மத்தகிரிக்கு பதிலாக மாவத்துாரில் சிப்காட் அமைக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.கடவூர் அருகே மத்தகிரி வீரமலை தாக்கல் செய்த பொதுநல மனு: மத்தகிரியில் மூன்று போக விவசாயம் நடக்கிறது. இங்கு சிப்காட் ஜவுளி பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஜவுளி பூங்கா அமைத்தால் விவசாயம், மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அருகில் மாவத்துாரில் விவசாயம் செய்ய முடியாத சரளை மண் நிலம் உள்ளது. அங்கு சிப்காட் அமைக்க அப்பகுதியினர் ஒப்புதல் அளித்துள்ளனர். அங்கு அமைக்கும் பட்சத்தில் அப்பகுதி வளர்ச்சியடையும், வேலைவாய்ப்பு கிடைக்கும். மத்தகிரிக்கு பதிலாக மாவத்துாரில் சிப்காட் அமைக்க வலியுறுத்தி தமிழக தொழில்துறை செயலர், நில நிர்வாக கமிஷனர், சிப்காட் மேலாண்மை இயக்குனருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: இது தொடர்பாக அரசாணை வெளியாகும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறையை அணுகி மனுதாரர் நிவாரணம் தேடலாம். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.