உள்ளாட்சி குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:மாநிலம் முழுவதும் மேல்நிலை குடிநீர் தொட்டிகளை காலமுறை இடைவெளியை பின்பற்றி உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்கள் சுத்தம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசின் குடிநீர் திட்டங்கள் மூலம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதிலிருந்து குழாய்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இவற்றை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் அடிக்கடி சுத்தம் செய்வதில்லை. அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை.ராமநாதபுரத்தில் 2019ல் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவித்தனர். குறிப்பிட்ட பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் 2019 ஜன.,9 ல் ஆய்வு செய்தபோது ஒருவர் அங்கு தற்கொலை செய்து, உடல் பல நாட்கள் மிதந்தது உறுதியானது. சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்திருந்தால், இச்சம்பவத்தை தடுத்திருக்கலாம். உரிய நேரத்தில் ஆய்வு செய்யத் தவறிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலம் முழுவதும் மேல்நிலைகுடிநீர் தொட்டிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். தவறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகள் திறந்திருக்காதவாறு மூடி வைத்திருக்க வேண்டும். அனுமதியின்றி அப்பகுதியில் யாரும் நுழையாதவாறு சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும். பாதுகாவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும். காலமுறை இடைவெளியை பின்பற்றி தொட்டிகளை சுத்தம் செய்து உள்ளாட்சி நிர்வாகங்கள் முறையாக பராமரிப்பதை தமிழக தலைமைச் செயலர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.