ஸ்ரீவில்லிபுத்துார் சாஸ்தா கோயிலில் இரு நாட்கள் தங்கி வழிபாடு நடத்த வழக்கு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை:ஸ்ரீவில்லிபுத்துார் ஸ்ரீசாஸ்தா கோயிலில் இரு நாட்கள் தங்கி வழிபாடு நடத்த அனுமதி வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இரு நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க விருதுநகர் மாவட்ட வன அலுவலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் பாலமுருகன் தாக்கல் செய்த மனு: ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை வனப்பகுதியில் உள்ள ஸ்ரீசாஸ்தா கோயிலில் ஆக., மாதம் ஐயப்பனை வழிபடும் பழக்கம் கடந்த 200 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இதை முன்னிட்டு 7 கிராம முதியவர்களும் இரண்டு நாட்களை தேர்வு செய்து கோயிலில் வழிபாடுகள், திருவிழாக்களை நடத்துவர். கடந்த ஆண்டு மேகமலை வனப்பகுதியில் தங்கி வழிபட தடை விதிக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஆக., 8, 9ல் வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். அரசு தரப்பில், ''புலி நடமாட்டம் இருப்பதால் இரவில் தங்க அனுமதி வழங்க இயலாது'' என தெரிவிக்கப்பட்டது. மனுதாரரின் மனுவை இரு நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க விருதுநகர் மாவட்ட வன அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு பைசல் செய்யப்பட்டது.