உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு கட்டடம் அமைக்க நீர்நிலையை தேர்வு செய்யக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு கட்டடம் அமைக்க நீர்நிலையை தேர்வு செய்யக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : எதிர்காலத்தில், எந்தவொரு கட்டடம் அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும்போது, ​​​​ நீர்நிலைகள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே பழவூரில் நீரோடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர், சேரன்மகாதேவி ஆர்.டி.ஓ.,விற்கு உத்தரவிடக்கோரி அருமைதாஸ் என்பவர் மனு செய்தார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: ஆவரைகுளம் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து நீரோடை துவங்குகிறது. இதில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன என மனுதாரர் தரப்பு தெரிவித்தது. நுாறு நாள் வேலைத்திட்ட சேவை மையம் கட்டப்பட்டதே மனுதாரரை இந்நீதிமன்றத்தை நாட வைத்தது.ஓடையில் சமுதாயக்கூடம் கட்டும் பணி 2015-- 16 ல் துவங்கியது. இவ்வழக்கு தாக்கலானதை தொடர்ந்து கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டதை அரசு தரப்பு ஒப்புக் கொண்டது. வட்டார வளர்ச்சி அலுவலர், 'ஏற்கனவே ரூ.14.55 லட்சம் செலவிடப்பட்டுள்ளது,' என பதில் மனு தாக்கல் செய்தார்.கட்டுமானத்திற்கு இந்த இடத்தை தேர்வு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட குழுவிடம் முறையான அனுமதி பெறவில்லை. எந்த நீர்நிலையிலும் கட்டுமானம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. இக்கட்டுமானத்தை அகற்ற வேண்டியது அவசியம். அதே சமயம், சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், பொதுநிதி ரூ.14.55 லட்சம் வீணாகிப் போனதை மறந்துவிட முடியாது. இதற்கு யாரை பொறுப்பாக்குவது என தெளிவுபடுத்த கலெக்டருக்கு உத்தரவிட்டோம். அவர், 'இப்பணி நடைபெற்ற காலகட்டங்களில் பணிபுரிந்த சம்பந்தப்பட்ட 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒரு பொறியாளர் பொறுப்பாக்கப்பட்டுள்ளனர். அவர்களிமிடருந்து பணம் வசூலிக்கப்படும்,' என தெரிவித்தார். தவறிழைத்த அலுவலர்களிடமிருந்து ரூ.14.55 லட்சம் வசூலிக்கப்படுவதை கலெக்டர் உறுதிசெய்ய வேண்டும்.பல சமயங்களில் அரசு கட்டடங்கள் நீர்நிலைகளில் அமைக்கப்படுவதை காண்கிறோம். எதிர்காலத்தில், எந்தவொரு கட்டடம் அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும்போது, ​​​​ அதற்கு நீர்நிலைகள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விரிவான சுற்றறிக்கையை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலர் வெளியிட அறிவுறுத்துகிறோம். இவ்வழக்கில் நீர்நிலையிலுள்ள கட்டுமானம் மற்றும் அதன் கழிவுகளை அகற்றுவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே இருந்தபடி நீர்நிலையை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை