உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தனியார் கிணற்றிற்கு பாதுகாப்பு தேவையில்லை உயர்நீதிமன்றம் உத்தரவு

தனியார் கிணற்றிற்கு பாதுகாப்பு தேவையில்லை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : உள்ளாட்சி நிர்வாகங்கள் தனியார் கிணற்றிற்கு எவ்விதமான பாதுகாப்பையும் வழங்கத் தேவையில்லை. கிணற்றில் மூழ்கி ஒருவர் இறந்ததற்கு இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த பீட்டர் தாக்கல் செய்த மனு:எனது மகன் நண்பர்களுடன் பொதும்புவிலுள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். மூழ்கி மகன் இறந்தார். போலீசார் வழக்கு பதிந்தனர். பொதும்பு ஊராட்சி நிர்வாகம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனக்குறைவால் சம்பவம் நடந்துள்ளது. எனக்கு இழப்பீடு வழங்க வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: ஆபத்தான கட்டமைப்பு இருக்கும்பட்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டப் பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்கள் தவறிவிட்டதாக மனுதாரர் தரப்பு தெரிவிக்கிறது. மனுதாரரின் மகன் எந்த அனுமதியும் இன்றி மூன்றாம் நபருக்கு சொந்தமான தனியார் கிணற்றில் குளிக்கச் சென்றார். இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகங்கள் தனியார் கிணற்றிற்கு எவ்விதமான பாதுகாப்பையும் வழங்கத் தேவையில்லை. மனுதாரரின் மனுவை பரிசீலிக்க முடியாது. மனு தகுதியற்றது. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ