பொம்மன்பட்டியில் முழுமை பெறாத சிறு பாலப்பணி
சோழவந்தான்: சோழவந்தான் பொம்மன்பட்டி அருகே வடகரை வரத்து கால்வாயில் பழுதடைந்த பாலம் அகற்றப்பட்டது. அதில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.18.50 லட்சத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. பாலத்தின் இருபுறமும் தார் மூலம் இணைக்க வேண்டிய பகுதியில் ஜல்லிக் கற்களை பரப்பி சென்றனர். அதன்பின் பணிகள் நடக்கவில்லை. இதனால் டூவீலரில் கடந்து செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். பழைய கட்டுமானத்தை முழுமையாக அகற்றாமல் பணிகள் நடந்துள்ளதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.இந்திய கம்யூ. நிர்வாகி மூர்த்தி கூறுகையில், ''பாலத்தின் தடுப்புச் சுவர்கள் முழுமையாக கட்டப்படாமல் பாதுகாப்பற்றதாக உள்ளது. ஒன்றியங்களில் சாலை மற்றும் கட்டுமானப் பணிகளை ஒப்பந்த பெறும் ஒப்பந்ததாரர்கள் அந்தப் பணியை சப் கான்ட்ராக்ட் விடுகின்றனர். இதனால் பணிகள் தரமற்ற முறையில் அரைகுறையாக நடக்கிறது. பாலப் பணிகள் குறித்த அறிவிப்பு தவறாக உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.