கட்டட இடிபாடுகளை அகற்ற வலியுறுத்தல் மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
சோழவந்தான்: 'சோழவந்தான் அருகே சக்கரப்ப நாயக்கனுாரில் இடிக்கப்பட்டு அகற்றப்படாமல் கிடக்கும் பள்ளிக் கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்த வேண்டும்' என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். அப்பகுதி விஜயன் கூறியதாவது: இங்கு மந்தை அருகே 50 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டதால், நடுநிலைப்பள்ளி தொடக்கப் பள்ளியாகி புதிய கட்டடத்தில் இயங்குகிறது. நடுநிலைப் பள்ளி இயங்கிய கட்டடம் பராமரிப்பின்றி சேதமடைந்தது. பொதுமக்கள் வலியுறுத்தியதால், பள்ளிக் கட்டடம் ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அந்த இடிபாடுகள் அகற்றப்படாமல் பலமாதங்களாக வளாகத்திலேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்குள் பாம்பு, தேள், பூரான் உள்பட விஷப்பூச்சிகள் அடைக்கலமாகின்றன. ஆபத்தை உணராமல் குழந்தைகள் இடிபாடுகளுக்குள் விளையாடச் செல்கின்றனர். அதிகாரிகளிடம் இது குறித்து புகார் செய்தும் அலட்சியம் காட்டுகின்றனர். விபரீதம் விளையும் முன் கல்வித்துறையோ, மாவட்ட நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.