ஆவின் பால் கொள்முதலில் மோசடி; விசாரணை நடத்த வலியுறுத்தல்
மதுரை : மதுரை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களிலிருந்து ஆவினுக்கு அனுப்பிய பாலின் அளவு, தரம் குறித்த கணக்குகளில் முறைகேடு, மோசடி குறித்து விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.அவர் தெரிவித்தாவது: மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் 1.65லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் குளிரூட்டும் நிலையங்களில் குளிரூட்டப்படுகிறது. அங்கிருந்து மதுரை மத்திய பால் பண்ணைக்கு ஆவின் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.லாரியில் ஏற்றப்படும் பால் அளவு, பாலின் தரத்தை உறுதி செய்து ஒப்புகைச் சீட்டு வழங்கப்படாததால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து ஆவினுக்கு அனுப்பப்படும் பாலின் அளவு, தரத்தை குறைத்து காண்பித்து சில அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட வாழைத்தோப்பு மொத்த பால் குளிரூட்டும் நிலைய தலைவர் வைரமணி மதுரை ஆவின் பொது மேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜூலை முதல் அக்டோபர் வரை ஆவினுக்கு அனுப்பிய மொத்த பால் அளவில் ஆவின் தரப்பிலிருந்து குறைத்து கணக்கு எழுதப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு பட்டுவாடா செய்ய வேண்டிய ரூ. 1.30 லட்சத்தை தனது சொந்த பணத்திலிருந்து வழங்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.தங்கள் பால் குளிரூட்டும் நிலையத்திலிருந்து ஆவினுக்கு கொண்டு செல்லும் டேங்கர் லாரி கருவட்டாணை, கட்டாரப்பட்டி, எழுமலை, அழகியநல்லுார் குளிரூட்டும் நிலையங்களிலிருந்தும் பால் ஏற்றிச் செல்வதால் அவற்றின் தலைவர்களோடு கூட்டணி வைத்து சில அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர். தங்கள் நிலைய பால் கணக்கில் குறைவாக கணக்கு எழுதியுள்ளதாகவும், விசாரணை நடத்தக்கோரியும் மதுரை ஆவின் பொதுமேலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.சில பால் குளிரூட்டும் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஆவினுக்கு அனுப்பிய பாலில் தண்ணீர் கலப்படம் செய்த வீடியோ வெளியானது. இம்முறைகேட்டிற்கு காரணமானவர்கள், போலி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகம் முன்வரவில்லை. மாறாக பாலில் தண்ணீர் கலப்படம் செய்ததை கண்டுபிடித்த ஆவின் விரிவாக்க அலுவலரை சஸ்பெண்ட் செய்து, தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக ஆவின் நிர்வாகம் செயல்படுகிறது. பால் கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க ஆவின் நிர்வாகம் விரும்பவில்லை.மதுரை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மொத்த பால் குளிரூட்டும் நிலையங்களிலிருந்து ஆவினுக்கு அனுப்பிய பாலின் அளவு, தரம் குறித்த கணக்குகளில் முறைகேடு, மோசடி குறித்து விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.