மதுரையில் மாணவர் விடுதிக்கு ஒருங்கிணைந்த சமையல் கூடம்
மதுரை : ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மதுரையில் 29 மாணவர் விடுதிகளுக்கு 2 இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைகளின் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்நலத்துறை சார்பில் 48 மாணவர் விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றுக்கு அந்தந்த விடுதிகளிலேயே சமையல் கூடம் உள்ளது. அவற்றில் சமைத்த உணவையே மாணவர்களுக்கு வழங்குகின்றனர். இந்நிலையில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பல விடுதிகளில் சமையலர் பணியிடம் காலியாக உள்ளது. அவை பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இதையடுத்து ஒருங்கிணைந்த சமையல் கூடம் உருவாக்கி அங்கு சமைத்து விடுதிகளுக்கு வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரையில் முதற்கட்டமாக ஒத்தக்கடை, சாத்தமங்கலம் ஆகிய 2 இடங்களில் நகரப்பகுதி விடுதி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சமையல்கூடம் கட்டும்பணி நடக்கிறது. ஒத்தக்கடையில் 14 விடுதிகள், சாத்தமங்கலத்தில் 15 விடுதிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல்கூடம் நடத்துவதற்கான டெண்டர் விடும்பணிகள் துவங்க உள்ளது. விரைவில் டெண்டர் விட்டு, நவம்பர் முதல் சமையல் துவங்கி, அனைத்து விடுதிகளுக்கும் 3 வேளையும் உணவு சப்ளை செய்யப்படும். இதில் 1700 மாணவர்கள் பயன்பெறுவர். புதிய கட்டடங்கள்:மதுரையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவர்களுக்கு ரேஸ்கோர்ஸ் அருகே உள்ள விடுதியின் அருகில் புதிய விடுதி கட்டுமான பணி துவக்கப்பட்டுள்ளது. 250 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.11.9 கோடி செலவில் கட்டப்படும் இவ்விடுதி 3 தளங்களுடன் அமையும். இதேபோல சொக்கிக்குளத்தில் ஒரே வளாகத்தில் 6 விடுதிகள் செயல்படுகின்றன. இங்கு மாணவிகள் போதிய இடவசதியின்றி தவிக்கின்றனர். இதையடுத்து இங்கும் 3 தளங்களுடன் 250 பேர் தங்கும் வகையில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை செப்.30 ல் முதல்வர் திறந்து வைக்க வாய்ப்புள்ளது. புதிய விடுதியில் கழிவறை வசதியுடன் நான்கு பேருக்கு ஒரு அறை உட்பட அனைத்து நவீன வசதிகளும் உண்டு.