நுாறுநாள் வேலைத்திட்ட முறைகேடு குறித்து ஆய்வு; திருமங்கலம் ஒன்றியத்தில் பணி நடந்ததாக செட்டப்
திருமங்கலம் ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாவட்டத்தில் அதிக நிதி பெற்றுள்ளனர். இதையடுத்து நேற்று டில்லியில் இருந்து வந்த அதிகாரிகள் குழு, நுாறுநாள் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தது. அறிவிப்பு பலகைக்கு ஏற்பாடு
பல்வேறு இடங்களில் வேலைகள் நடக்காமலே நடந்ததாகவும், சில இடங்களில் வேலைகள் நடந்ததாக கூறி, வேலைகளைத் தொடங்காமலும் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் குழுவினர் ஆய்வுக்கு வந்த போது, ஓரளவு வேலைகள் நடந்த ஊராட்சிகளுக்கு மட்டுமே அழைத்துச் செல்ல இங்குள்ள அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். இதையடுத்து பல்வேறு ஊராட்சிகளில் வேலை தொடங்கி நடப்பது போல, அறிவிப்பு பலகைகளை வைக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து வேலைகள் நடக்காமலும், தொடங்காமலும் உள்ள இடங்களிலும் பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.குறிப்பாக உரப்பனுார் ஊராட்சியில் இந்திரா காலனியில் வேலை நடக்காமல் 2024 டிசம்பரில் பணிகள் தொடங்கப்பட்டதாக நேற்று போர்டு வைக்க முயன்றனர். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போர்டு வைக்க வந்தவர்கள் பாதியில் கிளம்பினர். மற்றொரு தெருவில் பாதி வேலை முடிந்து 3 மாதங்கள் ஆனநிலையில், வேறெந்த வேலையும் நடக்கவில்லை. அந்த தெருவில் உள்ள குடிநீர் இணைப்புகள் வேலை செய்த போது உடைக்கப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் பயனாளர்களுக்கு பதில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். நேற்று காலை முதல் மாலை வரை உரப்பனுாரில் ஆய்வு செய்த குழுவினர் பல்வேறு முறைகேடுகளை கண்டறிந்தனர்.'ஆய்வு முடிந்தபின் அது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும். அதன்பின்னர் முறைகேடில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என ஆய்வுக் குழுவினர் தெரிவித்தனர். 100 நாள் வேலைக்கு மத்திய அரசு பணம் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், ஏற்கனவே வழங்கிய பணத்திற்கு பணிகள் முறையாக நடக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
22 அதிகாரிகள் குழு
மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரிகள் தேசிய அளவில் நடைபெறும் மகாத்மா காந்தி நுாறு நாள் வேலைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்திலும் 2021 - 2026 வரையான காலகட்டத்தில் நடந்த பணிகளை ஆய்வு செய்ய மதுரைக்கு 22 பேர் கொண்ட அதிகாரிகள் குழு வந்துள்ளது. தேசிய அளவிலான கண்காணிப்பாளர்களான மத்திய அரசின் துணைச் செயலாளர் ஆசிஷ்குப்தா மற்றும் அங்கிட் சிங்லா ஆகியோர் தலைமையிலான இக்குழு ஏப். 20 வரை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளது. இவர்கள் நுாறுநாள் திட்டப் பணிகள் நடந்த பகுதிக்கு நேரடியாக சென்று மதிப்பீடு செய்து வருகின்றனர்.