மதுரையில் ரோட்டில் கிடந்த ரூ.17 லட்சம் ஹவாலா பணமா என விசாரணை
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.17.49 லட்சத்தை கண்டெடுத்த பெண், போலீசில் ஒப்படைத்தார். நேற்று மாலை வரை யாரும் உரிமை கோராததால், ஹவாலா பணமா என போலீசார் விசாரிக்கின்றனர். மதுரை சிம்மக்கல் திருமலைராயர் படித்துறையைச் சேர்ந்தவர் செல்வராணி 50. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மீனாட்சி கோயில் கிழக்கு ஆடி வீதியில் இருந்து வீட்டிற்கு நடந்துசென்றார். மீனாட்சி பார்க் - கீழஆவணி மூலவீதி சந்திப்பு அருகே கார் ஒன்றில் இருந்து சாக்குமூடை ஒன்று விழுந்தது. அதை கவனிக்காமல் கார் கடந்து சென்றது. இதை கவனித்த செல்வராணி, அந்த மூடை அருகே வந்தபோது, காரில் இருந்து விழுந்த வேகத்தில் மூடை ஒருபுறம் கிழிந்து 500 ரூபாய் நோட்டு கட்டுகள் வெளியே தெரிந்தன. அப்போது போலீஸ் ரோந்து வாகனம் வந்தது. போலீசாரிடம் செல்வராணி கூற, அந்த மூடையை போலீசார் விளக்குத்துாண் ஸ்டேஷனிற்கு எடுத்து வந்தனர். எண்ணி பார்த்தபோது 35 கட்டுகள் கொண்ட 500 ரூபாய் நோட்டுகள் மொத்தம் ரூ.17 லட்சத்து 49 ஆயிரம் இருந்தது. செல்வராணியை பாராட்டிய போலீசார், உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று மாலை வரை பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் பணத்தை தவறவிட்டுச்சென்ற கார் பதிவெண்ணை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூறியதாவது: மீனாட்சி கோயில் பகுதியில் வடமாநிலத்தவர்கள் பேன்சி, ஜவுளி என பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். அவர்கள் தொழில் வளர்ச்சிக்காக காரில் எடுத்துச் சென்றபோது தவறவிட்டார்களா அல்லது மீனாட்சி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தவர்கள் தவறவிட்டு சென்றார்களா என விசாரித்து வருகிறோம். ஹவாலா பணமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இவ்வாறு கூறினர்.