உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எல்லை மாற்றி பதவி வழங்கிய அமைச்சர் மூர்த்திக்கு சலுகையா தளபதி ஆதரவாளர்கள் போர்க்கொடி

எல்லை மாற்றி பதவி வழங்கிய அமைச்சர் மூர்த்திக்கு சலுகையா தளபதி ஆதரவாளர்கள் போர்க்கொடி

மதுரை: மதுரையில் தி.மு.க., தெற்கு மாவட்ட நிர்வாகியை வடக்கு மாவட்டத்திற்கு மாற்றி அவருக்கு பதவியும் பெற்றுத் தந்துள்ளார் அமைச்சர் மூர்த்தி. இதுபோல் வடக்கு மாவட்டத்தில் உள்ள தளபதி ஆதரவாளர்கள் தங்களை மீண்டும் நகர் தி.மு.க.,விற்கு மாற்ற வேண்டும் என உட்கட்சிக்குள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். மதுரை தி.மு.க.,வில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர்கள் தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் என 4 ஆதரவாளர்களாக பிரிந்து கிடக்கின்றனர். நகர் தி.மு.க., செயலாளர் தளபதியிடம் இருந்த மேற்கு சட்டசபை தொகுதி சில மாதங்களுக்கு முன் அமைச்சர் மூர்த்தியின் வடக்கு மாவட்ட எல்லைக்குள் மாற்றப்பட்டது. மேற்கு தொகுதி நிர்வாகிகள் தளபதி ஆதரவாளர்கள் என்பதால் மூர்த்திக்கு விசுவாசமாக இல்லை என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே வரும் சட்டசபை தேர்தலில் மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் வெற்றி பெறச் செய்து தருவதாக தி.மு.க., தலைமைக்கு மூர்த்தி உறுதியளித்துள்ளதால், மேற்கு தொகுதியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என கேட்டு தலைமையிடம் அனுமதியும் பெற்றார். இதனால் வட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை 22ல் இருந்து 58 ஆகவும், பகுதி செயலாளர் எண்ணிக்கையை 5ல் இருந்து 11 ஆகவும் உயர்த்தி, புதிய பதவிகளில் தனது ஆதரவாளர்களை மூர்த்தி நியமித்தார். தளபதியின் விசுவாசிகளில் 7 வட்டம், பகுதிச் செயலாளர்களுக்கு 'கல்தா' கொடுத்து, அவர்களுக்கு பகுதி உறுப்பினர்கள் என்ற 'டம்மி' பதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தளபதி ஆதரவாளர்கள் தலைமைக்கு புகார் அனுப்பி வருகின்றனர். இதற்கிடையே மணிமாறன் வசம் உள்ள தெற்கு மாவட்டத்தின், துணை செயலாளராக இருந்த பாலாஜியை, அங்கிருந்து வடக்கு மாவட்டத்திற்கு மாற்றி தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியை அமைச்சர் மூர்த்தி பெற்றுத்தந்துள்ளார். இதை எப்படி தலைமை அனுமதித்தது என தளபதி ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர். தளபதி ஆதரவாளர்கள் கூறுகையில், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு ஒரு நிர்வாகியை மாற்றுவது புதிதாக உள்ளது. இதே பாணியில் வடக்கு மாவட்ட தி.மு.க., எல்லைக்குள் உள்ள எங்களை மீண்டும் நகர் தி.மு.க.,விற்கு மாற்றுங்கள். அங்கு தளபதியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுகிறோம். இதுகுறித்து தலைமையிடம் வலியுறுத்துவோம் என்றனர். மூர்த்தி ஆதரவாளர்கள் கூறுகையில், தொகுதியில் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தலைமை அனுமதிபெற்று மூர்த்தி மேற்கொள்கிறார் என்றனர். இதனால் மதுரை தி.மு.க.,வில் உட்கட்சி புகைச்சல் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை