உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரேஷன் கார்டில் பெயர் நீக்க ரூ.2 ஆயிரம்; புதிய கார்டு பெறுவதற்கு ரூ.3 ஆயிரமாம்; வாட்ஸ் ஆப் மூலம் முறைகேடு சாத்தியமா

ரேஷன் கார்டில் பெயர் நீக்க ரூ.2 ஆயிரம்; புதிய கார்டு பெறுவதற்கு ரூ.3 ஆயிரமாம்; வாட்ஸ் ஆப் மூலம் முறைகேடு சாத்தியமா

பேரையூர் : தமிழகம் முழுவதும் சில மாதங்களாக ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம் செய்ய ரூ.2000, புதிய ரேஷன் கார்டுக்கு ரூ.3000 உள்ளிட்ட முறைகேடுகள் நடந்து வருகிறது. அரசு தரும் சலுகைகள், உதவித்தொகை ஆகியவற்றைப் பெற ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் அட்டை வாயிலாக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோரின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் மானிய விலையிலும், இலவசமாக அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற பொருட்களையும் வழங்குகிறது. ரேஷன் கார்டு பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டுகளில் புதிய உறுப்பினர் சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க உள்ளிட்ட சேவைகளுக்காக www.tnpds.gov.inஎன்ற இணையதளம் உள்ளது. ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் குடும்பத் தலைவரின் அலைபேசி எண் பதியப்பட்டிருக்கும். இந்த இணையதளத்தில் பயனாளரின் அலைபேசி எண்ணை உள்ளீடு செய்தவுடன் அலைபேசிக்கு 'ஓ.டி.பி.,' வரும். அதை கடவுச்சொல்லாக பயன்படுத்தி இந்த சேவைகளை பெறலாம். இதில் பெயர் நீக்கம் செய்ய திருமணமாகும் பெண்களுக்கு திருமணச் சான்றிதழ் அல்லது அழைப்பிதழ் போன்றவற்றை உள்ளீடு செய்தால் வட்ட வழங்கல் அலுவலர் ஒப்புதல் தருவார். அதேபோல் ஆண்களுக்கு வீட்டு வரி ரசீது அல்லது சிலிண்டர் ரசீது உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்தால் நீக்கம் செய்ய ஒப்புதல் கிடைக்கும். ஆனால் சில மாதங்களாக தமிழகம் முழுவதும் வாட்ஸ் ஆப் குழுக்களில் பெயர் நீக்கம் செய்ய எந்த ஆவணமும் தேவையில்லை. ஒ.டி.பி-யும் தேவையில்லை. ரூ.ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை பெற்றுக் கொண்டு பெயர்களை நீக்கம் செய்து வருகின்றனர். இதற்காக ஒரு கும்பல் தமிழக முழுவதும் செயல்பட்டு, வாட்ஸ் ஆப் குரூப்களில் விளம்பரம் செய்து வருகின்றனர். எந்த ஆதாரமும் இல்லாமல் குடும்பத்தினருக்கே தெரியாமல் பெயர் நீக்கம் செய்து வருவது மிகவும் ஆபத்தானது. வருவாய்த் துறையினரிடம் இது பற்றி கேட்டபோது, 'பெயர் நீக்கம், சேர்த்தல், புதிய ரேஷன் கார்டு சேவையை அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் தற்போது எங்களது ஒப்புதலுக்கு வராமலும் இது போல எல்லாம் நடக்கிறது. இதில் பாதித்த சிலர் தங்களுக்கே தெரியாமல் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்' என்றனர். அதேபோல் இந்தக் கும்பலால் புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்கும் ரூ. 3000 பெற்றுக் கொண்டு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. இந்த முறைகேடுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

RAMANI MUTHUKUMARAN
ஆக 29, 2025 17:56

நல்ல விழிப்புணர்வு தகவல். தினமலருக்கு பாராட்டுக்கள். நன்றி.


Lkanth
ஆக 27, 2025 20:08

உண்மையில் காசுதான். இசேவையில் ரேஷன் கார்டில் திருத்தம் செய்தால் மூன்று மாதங்கள் ஆகிறது . மொபைல் எண் மாற்றம் செய்ய TSO ஆபீஸ் ஊழியரை அணுகினால் 300ரூபாய் கொடுத்தால் ஒரு நிமிடத்தில் மாற்றம் செய்து கொடுக்கின்றனர்.டூப்ளிகேட் கார்டு ஒரே நாளில் புதிய கார்டு பிரிண்ட் போட்டு கொடுக்கின்றனர்.புதிய குடும்பகார்டு வேண்டி இச்சேவையில் மனு செய்து அந்த மனுவை டிஎஸ்ஓ ஆஃபிஸ் கிளர்க்கிடம் கொடுத்து 3000 ரூபாய் கொடுத்தால் ஒரு வாரத்தில் புதிய ரேஷன் கார்டு கையில் கிடைக்கிறது . பட்டா மாறுதல் கூட இப்படித்தான் இருக்கிறது.


Gnanasekar ravi municipolty2025
ஆக 26, 2025 17:50

வெல்கம் சார்


புதிய வீடியோ