உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உணவுப் பொருள் விற்பனைக்காக உருவாகிறதா பைபாஸ் ரோடு அவனியாபுரத்திலும் அவதி நிச்சயம்

உணவுப் பொருள் விற்பனைக்காக உருவாகிறதா பைபாஸ் ரோடு அவனியாபுரத்திலும் அவதி நிச்சயம்

மதுரை: நகர் விரிவாக்கத்திற்கு ஏற்ப வாகனங்கள் பெருகும்போது, வாகன போக்குவரத்தை எளிமைப்படுத்த நகருக்கு வெளியே பைபாஸ் ரோடு அமைப்பர். ஆனால் இந்த ரோடுகளில் கடைஅமைக்க இடம் கிடைப்பதால், அதிகாரிகள், அரசியல் புள்ளிகள், போலீஸ் ஆசியுடன் ஆக்கிரமிப்பாளர்கள் கடைவிரித்து காசு பார்க்கின்றனர். மதுரை காளவாசல் பகுதியில் 4 கி.மீ., பைபாஸ் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் காளவாசல் முதல் போடி லைன் ரயில்வே மேம்பாலம் வரை இருபுறமும் 'பீச்' போன்று ஓட்டல்களும், கடைகளுமே நிறைந்துள்ளன. மாலை 5:00 மணிக்குமேல், நெரிசல் மிகுந்த ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி, ரோட்டோரம் சேரில் அமர்ந்து சாவகாசமாக உண்கின்றனர். இந்த ரோட்டில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என 11 பேருக்கே நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. மற்றவையெல்லாம் மாநகராட்சி, நெடுஞ்சாலை, போலீஸ் துறையினரின் 'ஆசி'யால் உரிமம் இன்றி உணவுப் பொருட்களை விற்கின்றன. இதனால் பைபாஸ் ரோட்டின் நோக்கம் மாறிப்போவது பற்றி, எந்த அதிகாரியும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவனியாபுரத்தில் அவதி நிச்சயம் இந்த நிலை விரைவில் அவனியாபுரம் பைபாஸ் ரோடுக்கும் வரப்போகும் அறிகுறி துவங்கிவிட்டது. ஏனெனில் அவனியாபுரத்தில் 2.5 கி.மீ., தொலைவுக்கு இரு வழிச்சாலையாக பைபாஸ் ரோடு உள்ளது. இங்கும் ஆங்காங்கு ஓட்டல்கள், ஒர்க் ஷாப்புகள், வர்த்தக நிறுவனங்கள் என வந்துவிட்டன. ஓரிரு ஆண்டில் இங்கும் வாகனங்கள், மனிதர்கள் செல்ல முடியாத அளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உறுதியாகிவிட்டது. அதற்கேற்ப நாளும் புதிது புதிதாக கடைகள் வருகின்றன. அதுபற்றி கேட்டால் நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி எங்களுக்கு தெரியாது என கை விரிக்கின்றன. அப்படியானால் யார் கடைகளை அனுமதிக்கின்றனர் என்றே தெரியவில்லை. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் பின்னாளில் முடியவே முடியாது. இந்த ரோட்டில்தான் நகருக்குள் இருந்து விமானநிலையம், ரிங்ரோடு செல்ல வேண்டும். அதற்கேற்ப இப்போதே ரோட்டை 'கிளீன்' செய்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை