அங்கன்வாடி பணியாளர் நியமனம் எப்போது சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து ஒரு மாதமாகிவிட்டது
மதுரை : மதுரையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் பணிநியமனம் தாமதமாவதாக விண்ணப்பித்தோர் அதிருப்தி தெரிவித்தனர்.மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு பொறுப்பாளர், ஒரு உதவியாளர் வீதம் பணியில் உள்ளனர். ஆனால் பல மையங்களில் ஒருவரே பணியில் உள்ளார். அந்த ஒருவரும் 2, 3 மையங்களை கண்காணிக்க வேண்டியுள்ளது. 2 ஆண்டுகளாக பணிநியமனம் இல்லாததால் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.சில மாதங்களுக்கு முன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் முறையே அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என்றும், அங்கன்வாடியில் அமைப்பாளர், உதவியாளர் என பல ஆயிரம் பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டது. இதில் மதுரை மாவட்ட அங்கன்வாடி மையங்களுக்கு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் என 373 பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டது.இந்த எண்ணிக்கை முழு காலியிடங்களையும் பூர்த்தி செய்துவிடாது என்றாலும், குறைந்த அளவிலாவது நியமனம் செய்கிறார்களே என ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இப்பணிக்காக விண்ணப்பித்தோரின் மனுக்களை பரிசீலனை செய்து, தகுதியுள்ளோருக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு வாரத்திற்கும் மேலாக கலெக்டர் அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதையடுத்து ஜூன் இறுதிக்குள் பணிநியமனம் நடந்துவிடும் என எல்லோரும் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த தகவலும் இல்லை.இதனால் பலரும் மனஉளைச்சலில் உள்ளனர். கடந்த ஆண்டுகளில் சத்துணவு, அங்கன்வாடி மைய பணிநியமனங்களில் ஆளுங்கட்சியினர் கைமேலோங்கி இருந்தது. ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் இணைந்து 'செல்வாக்கு' மிக்கோருக்கு பணிநியமனம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. காலதாமதத்தால் அதுபோன்ற குற்றச்சாட்டு எழுவதையும் தவிர்க்க இயலாது. எனவே விரைந்து பணிநியமனம் செய்து அறிவிக்க வேண்டும் என விண்ணப்பித்தோர் எதிர்பார்க்கின்றனர். கலெக்டர் பிரவீன்குமாரிடம் கேட்டபோது, ''விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம், பட்டியல் விவரங்கள் சென்னை இயக்குனர் அலுவலகத்தில் உள்ளது. விரைவில் தேர்வு செய்யப்படுவோர் பட்டியல் வெளியிடப்படும்'' என்றார்.