பாண்டியர் வரலாற்றை பாதுகாப்பது தமிழரின் கடமை: அமைச்சர் உறுதி
மதுரை: மதுரையில் அமைச்சர் தங்கம்தென்னரசுவிடம் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழுவினர், பாண்டியர் வரலாற்றை பாதுகாக்க மனு அளித்தனர். அனைத்து மறவர் நல கூட்டமைப்பி ன் பொதுச் செயலாளர் விஜயகுமார், அமைச்சருக்கு பாண்டியர் அரசின் அடையாளமான இரட்டை மீன் சின்னத்தை வழங்கினார். அமைச்சரிடம் குழுவின் தலைமை ஆய்வாளர் மணிகண்டன், 'பாண்டியர் மன்னர்கள் தமிழக வரலாற்றின் அடித்தளம். அவர்கள் உருவாக்கிய ஆட்சிமுறை, கலை, கட்டடக்கலை, கல்வெட்டு மரபு, நீர்ப்பாசன அமைப்புகள் இன்று உலகளவில் மதிக்கப்படுகின்றன. இந்த பாரம்பரியத்தை அரசு பாதுகாக்க வேண்டும்” என்றார். மனுவில் தெரிவித்துள்ளதாவது: பாண்டியர் கால கோயில்களின் புனரமைப்பு பணிகளை அரசு விரைவாக மேற்கொள்ள வேண்டும். கோயில்கள், கல்வெட்டுகள், முத்திரைகள் உள்ளிட்ட பண்டையச் சின்னங்களை அரசு ஆவணமாக பதிவு செய்து பாதுகாக்க ஒரு சிறப்பு குழு அமைக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி பாடப்புத்தகங்களில் பாண்டியர் மன்னர்கள், சாதனைகள் சேர்க்கப்பட வேண்டும். பாண்டியர் நாணயங்கள், கல்வெட்டுகள், தொல்லியல் பொருட்கள் பற்றிய அரசு ஆதரவு ஆய்வு மையம் நிறுவப்பட வேண்டும். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பாண்டியர் அரண்மனை, கோட்டை, கோயில் இடிபாடுகள் கொண்ட இடங்களை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் கூறுகையில், ''பாண்டியர் வரலாற்றை பாதுகாப்பது தமிழரின் கடமை. வரலாற்று மரபுகளை மீளுருவாக்குவதற்கான துறை ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.