| ADDED : டிச 14, 2024 06:54 AM
மதுரை : கோயில் நகரம், துாங்கா நகரம் என்று சொல்வதை விட, சாலையில்லா நகரம் என்று மதுரையை சரியாக அடையாளப்படுத்தும் அளவுக்கு, திரும்பும் திசையெல்லாம் பள்ளங்கள் ரோடுகளாகவும், ரோடுகள் யாவும் பள்ளங்களாகவும் காட்சியளிக்கின்றன.புதிய, பழைய ரோடுகள் என எந்த வித்தியாசமும் இன்றி, பெயர்ந்து போவதற்கென்றே பெயருக்கு ரோடுகளை அமைப்பார்கள் போலும். பைபாஸ் ரோட்டில் பழங்காநத்தம் முதல் பெத்தானியாபுரம் வரை இரண்டடி அகலத்தில் நேர்கோட்டில் டூவீலர்களில் செல்ல முடியாது. ரோடு ரோலர் சென்ற இடமெல்லாம் ஒட்டு போட்டது போல ரோடு, மேடு பள்ளமாகவே காணப்படுகிறது.காளவாசலில் இருந்து கோரிப்பாளையம் வரை 5 கி.மீ., ரோட்டில் நுாற்றுக்கணக்கில் மரண பள்ளங்களும், லட்சக்கணக்கில் பல்லாங்குழிகளும் உள்ளன. குறிப்பாக அரசரடி - புதுஜெயில் ரோட்டில் புதிதாக செல்வோரால், முன்னால் செல்லும் வாகனங்கள் இடமும் வலமும் நெளிந்து செல்வது ஏனென்று எளிதாக புரிந்து கொள்ள முடியாது.மீடியனாலும், ரோட்டோர ஆக்கிரமிப்பு வாகனங்களாலும் குறுகிப் போன ரோட்டில், பள்ளங்களிடையே பயந்து, பயந்து 'பைக்'கில் பாய்ந்து செல்வது சாகசமே. சாதாரண நாட்களில் புழுதியை சுவாசித்து அவதிப்பட்ட வாகன ஓட்டிகள், இருநாள் மழையால் சேறும், சகதியும் தங்களை அபிஷேகம் செய்ததால் திண்டாடித்தான் போயினர்.மதுரையின் பெரும்பாலான ரோடுகள் அனைத்தும் பள்ளங்களாகவே மாறிவிட்டன. கொஞ்சம் மெதுவாக பள்ளத்தில் ஏறி இறங்குவதற்குள் பின்னால் வரும் கனரக வாகனங்கள் ஆளையே துாக்கிவிடும். அந்தளவிற்கு ரோடு மோசம். ரோட்டோரங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி ஓரடி ஆழத்திற்கு தேங்கியது. இதனால் டூவீலரில் சென்றவர்கள் வாகனத்தை பாதுகாக்க ரோட்டின் நடுவிலேயே சென்றனர். புதுஜெயில் ரோட்டில் கரிமேடு பகுதியில் குண்டு பெயர்த்தது போல குண்டும், குழியுமாக உள்ளதாலும், அதில் மழைநீர் தேங்கியதாலும் காளவாசலில் இருந்து கோரிப்பாளையம் செல்ல 50 நிமிடங்களானது.ஒரு வாரத்திற்கு முன் அமைத்த யானைக்கல் ரோட்டை வெறுமனே சுரண்டி அதற்கு மேல் ரோடு அமைத்துள்ளனர். ரோட்டை சமப்படுத்தாததால் பாலத்தில் பயணிக்கும் போது அதிர்வுடன் கடக்க வேண்டியிருந்தது. இதனால் வாகனஓட்டிகள் முதுகுவலியால் அவதிப்பட்டனர். இத்தகைய மதுரையின் ரோடுகளில் எத்தகைய வாகனங்களில் சென்றாலும் விரைவாகவே எல்லா எலும்புகளிலும் தேய்மானம் வந்துவிடும் என்பது உறுதி.