உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டு காளைகள் எங்களுக்கு குல தெய்வம்: பயிற்சி அளிக்கும் உரிமையாளர்கள் நெகிழ்ச்சி

ஜல்லிக்கட்டு காளைகள் எங்களுக்கு குல தெய்வம்: பயிற்சி அளிக்கும் உரிமையாளர்கள் நெகிழ்ச்சி

அவனியாபுரம்; மதுரை அவனியாபுரத்தில் தை 1அன்று நடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க காளைகளுக்கு அப்பகுதியினர் மிகுந்த உற்சாகத்துடன் பயிற்சி அளித்து வருகின்றனர்.அவனியாபுரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட காளைகள் வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் உள்ளனர். மதுரை உட்பட பல்வேறு மாவட்ட போட்டிகளிலும் பங்கேற்கவும் இவ்வூர் காளைகள் தயாராகி வருகின்றன.காளைகள் வளர்க்கும் மாரி கூறியதாவது: எனக்கு விவரம் தெரிந்து 7 தலைமுறைகளாக காளைகள் வளர்க்கிறோம். எனது முன்னோர், ஜல்லிக்கட்டு காளைகள் நம்குலதெய்வம் எனக்கூறி, தொடர்ந்து வளர்க்க என்னிடம் சத்தியம் பெற்றுள்ளனர். எனவே எங்கள் குழந்தைகளாக கருதி நேசித்து வளர்க்கிறோம். தற்போது ஏழு காளைகளை வளர்க்கிறோம்.

பிரத்யேக பயிற்சிகள்

போட்டி நெருங்குவதால் தினமும் காலையில் 20 நிமிடம் நடைப்பயிற்சி, 15 நிமிடம் ஓட்டப் பயிற்சி, கண்மாயில் 30 நிமிடம் நீச்சல் பயிற்சி தினமும் அளிக்கப்படுகிறது. கூட்டத்தில் சீறிப்பாயவும் பயிற்சி, கூரிய பார்வை, மண்ணைக் குத்துதல் பயிற்சி, வீரர்களிடம் பிடிபடாமல் துள்ளிக் குதித்து வெளியேறும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இவற்றுக்கு உணவாக பருத்தி விதை, அவித்த பயறு, கோதுமைத் தவிடு, உளுந்து தவிடு, வைக்கோல், நாற்றுச் சோளம், இரும்புச் சோளம், பச்சரிசி தவிடு கொடுக்கிறோம். கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் தினமும் நாட்டுக்கோழி முட்டை, நவதானியங்கள், பேரிச்சம்பழமும் கூடுதலாக கொடுப்போம்.ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க செலவாகுமே தவிர வருமானம் கிடையாது. தமிழ் கலாசார, பாரம்பரிய விளையாட்டில் பங்கேற்கும் குறிக்கோளுடன் இவற்றை வளர்த்து வருகிறோம். காளைகள் வெற்றி பெறும் போது பெருமிதமாக இருக்கும். இக்காளைகள் வீட்டில் பசுக்களை விட சாந்தமாக, அமைதியாக இருக்கும். களத்தில் இறங்க மூக்கணாங்கயிறை அறுத்துவிட்டால் அவ்வளவுதான் புலியாக, புயலாக மாறிவிடும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ