உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சீக்கிரமா ரெடி பண்ணுங்க அங்கன்வாடி ஊழியர்கள் பணிநியமன பட்டியலை நடவடிக்கைக்கு 4 மாதங்கள் போதாதா என குமுறல்

சீக்கிரமா ரெடி பண்ணுங்க அங்கன்வாடி ஊழியர்கள் பணிநியமன பட்டியலை நடவடிக்கைக்கு 4 மாதங்கள் போதாதா என குமுறல்

மதுரை: மதுரையில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நான்கு மாதங்களாகி விட்ட நிலையில், அங்கன்வாடி மையங்களில் பணிப்பளு அதிகரிப்பால், காலியிடம் எப்போது நிரப்பப்படும் என ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி சேவை திட்டம் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுகிறது. ஊட்டச்சத்து வழங்குதல், முன்பருவ குழந்தைகளின் நலம் மற்றும் கல்வி, கர்ப்பிணிகளுக்கான கண்காணிப்பு சேவைகள், குழந்தைகள் வளர்ச்சி உட்பட பல்வேறு செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது. சங்கங்கள் வலியுறுத்தல் தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 மையங்களில் லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் செயல்படுகிறது. இந்த ஊழியர்களுக்கான பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை காலியாக உள்ளன. இதனால் ஒரு ஊழியரே 2 அல்லது 3 பணியிடங்களை கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச்சில் அறிவிப்பு வெளியானது. 3886 அங்கன்வாடி ஊழியர்கள், 305 சிறு மைய ஊழியர்கள், 3592 உதவியாளர்கள் என மொத்தம் 7783 பேர் நியமனம் செய்ய உள்ளதாக அறிவித்தனர். இவ்வகையில் மதுரை மாவட்டத்தில் 373 பேரை தேர்வு செய்ய இருந்தனர். இதையடுத்து மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன. இவ்விண்ணப்பங்களை மாவட்ட அளவில் பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த ஜூனில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. தொடர்ச்சியாக மாநில அதிகாரிகளின் ஒப்புதலுக்கு பின்பே நியமனம் பெற்றோர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்தனர். ஊழியர்களுக்கு பணிப்பளு இதனால் கடந்த நான்கு மாதங்களாக விண்ணப்பித்தோர் பணிநியமன அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 2 அல்லது 3 மையங்களை கவனிக்கும் ஊழியர்களும் கூடுதல் வேலைப்பளுவால் சிரமப்படுவதாக புலம்புகின்றனர். பணிநியமன பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இன்னும் 2 அல்லது 3 மாதங்களை தாண்டினால் சட்டசபை தேர்தல் நெருங்கி விடும். அதற்கான அறிவிப்பு வெளியானால் பணிநியமனம் மேலும் பல மாதங்களாகலாம். இதனை தவிர்க்க விரைந்து தேர்ச்சி பட்டியலை வெளியிட வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஊழியர் சங்கங்களிடம் கேட்டபோது, ''நீண்ட நாட்களாக பலர் இரண்டு, மூன்று மையங்களை கவனிக்கின்றனர். விவரங்களை பதிவேற்ற அலைபேசி, இணைய வசதியும் போதுமானதாக இல்லை. இப்போது அறிவித்துள்ளதும் பாதி அளவிலான காலியிடங்களை நிரப்புவதற்கே. அதையும் உடனே நிரப்பினால்தான் தரமான பணியை எதிர்பார்க்க முடியும்'' என்றனர். கலெக்டர் பிரவீன்குமாரிடம் கேட்டபோது, ''பணிநியமனம் குறித்து விரைந்து துறைரீதியில் விசாரித்து நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை