உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நடிகை கவுதமியிடம் நில மோசடி; 2 பேரின் முன்ஜாமின் தள்ளுபடி

நடிகை கவுதமியிடம் நில மோசடி; 2 பேரின் முன்ஜாமின் தள்ளுபடி

மதுரை: நடிகை கவுதமியிடம் நில மோசடி செய்த வழக்கில் அழ.அழகப்பன் உள்ளிட்ட 2 பேரின் முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றதால் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 4 பேருக்கு முன்ஜாமின் அனுமதித்தது.கவுதமியின் சொத்துகளை பராமரித்து வந்தவர் காரைக்குடி அழகப்பன். இவர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே துலுக்கன்குறிச்சியில் 64 ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுத்தார். அச்சொத்துக்களை பரிவர்த்தனை செய்யக்கூடாது என இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) உத்தரவிட்டுள்ளது. முறைகேடாக அந்நிலத்தை வாங்கிக் கொடுத்து ரூ.3 கோடியே 16 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக குற்றப்பிரிவு போலீசில் கவுதமி புகார் அளித்தார்.அழகப்பன், அவரது மகன் அழ.அழகப்பன், மருமகள் ஆர்த்தி மற்றும் மதுரை கோச்சடை ஜோசப் ஜெயராஜ் உட்பட சிலர் மீது வழக்கு பதியப்பட்டது.அழ.அழகப்பன், ஆர்த்தி, ஜோசப் ஜெயராஜ், பாக்கியசாந்தி, புதுார் ஜெயபாலன், சந்தான பீட்டர் முன்ஜாமின் மனு செய்தனர். முன்ஜாமின் அனுமதிக்கக்கூடாது என கவுதமி மனு செய்தார்.நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.அழ.அழகப்பன், ஆர்த்தி தரப்பில் மனுவை வாபஸ் பெற்றதால் நீதிபதி தள்ளுபடி செய்தார்.ஜோசப் ஜெயராஜ் உள்ளிட்ட 4 பேர் தரப்பு: இம்மனுதாரர்கள் அச்சொத்தின் முன்னாள் இயக்குனர்கள். அச்சொத்து விவகாரம் தற்போது 'செபி'யிடம் நிலுவையில் உள்ளது. சொத்து விற்பனை பண பரிவர்த்தனையில் 4 பேருக்கும் தொடர்பில்லை. இவ்வாறு தெரிவித்தது. அவர்களுக்கு நிபந்தனைகளுடன் நீதிபதி முன்ஜாமின் அனுமதித்தார்.விசாரணையை பார்வையிடுவதற்காக நீதிமன்றத்திற்கு கவுதமி வந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ