மகாலில் மே மாதம் லேசர் ஒலி ஒளிக்காட்சி அமைச்சர் உறுதி
மதுரை, : மதுரை திருமலை நாயக்கர் மகாலில் மே மாதத்தில் லேசர் ஒலி ஒளிக்காட்சி துவங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் உறுதியளித்தார்.மதுரையில் தமிழ்நாடு ஓட்டல், காந்தி மியூசியம், திருமலை நாயக்கர் மகால், கலைஞர் நுாற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் மற்றும் கீழடி மியூசியத்தை ஆய்வு செய்தார். காந்தி மியூசியத்தில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடக்கும் முதல் தளத்தை பார்வையிட்டார். இரண்டு மாதத்திற்குள் முடிவடைய உள்ளதாக மியூசிய செயலாளர் நந்தாராவ் தெரிவித்தார்.மியூசியத்தில் கன்வென்ஷன் ஹால் போன்று அமைத்தால் கண்காட்சி, கருத்தரங்கு நடத்த வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்தபோது பரிசீலிப்பதாக தெரிவித்தார். அருகிலுள்ள அரசு மியூசியத்தை பார்வையிட்ட போது அரசு மியூசியம் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென மியூசிய காப்பாட்சியர் மருதுபாண்டியன் கோரிக்கை வைத்தார்.மகாலை ஆய்வு செய்த போது தர்பார் ஹாலில் ஒலி ஒளிக்காட்சி இன்னமும் துவங்காதது குறித்து கேட்டார். மின் இணைப்புகள், கேமரா இணைப்புகள் அனைத்தையும் தரைத்தளத்தில் இருந்து இணைப்பதால் இரு மாதத்திற்குள் பணிகள் முடியும் என மகால் அலுவலர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து மே மாதம் லேசர் ஒலி ஒளிக்காட்சி உறுதியாக துவங்கப்படும் என்ற அமைச்சர், 'குட்லாடம்பட்டி அருவிக்கான டெண்டர் மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும். சோழவந்தான் சிற்றணையை சுற்றுலா தலமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.