மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை துவக்கம்
மதுரை:மதுரை விமான நிலையம் நேற்று முன்தினம் முதல் 24 மணி நேரமும் செயல்படும் நிலையமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான விழாவில் பங்கேற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், விமான சேவையை அதிகரித்து, கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும் நிலையமாக அறிவிக்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த இந்திய விமான நிலையங்களின் ஆணையத் தலைவர் எம்.சுரேஷ், ‛‛இன்று (அக்.1) முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்படும்'' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது: விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார்:
மதுரைக்கு 2012 முதல் வெளிநாட்டு நகரங்களுடனான விமான சேவை துவங்கியது. 24 மணி நேர சேவை துவங்கியது விமான நிலைய விரிவாக்கத்தின் அடுத்த கட்டமாக உள்ளது. இதனால் கூடுதல் விமானங்கள் உள்நாட்டு, சர்வதேச இணைப்பு அதிகரிக்கும். மாணிக்க தாகூர் எம்.பி.:
2010ல் புதிய டெர்மினல் துவக்கும் பணி துவங்கியபோதே, சர்வதேச சேவை உடனே துவங்கும் என்றனர். 2 ஆண்டுகள் கழித்து 2012ல் முதல் விமானம் வந்து இறங்கியது. 12 ஆண்டுகள் கழித்து அடுத்த இலக்கை அடைந்துள்ளோம். 2010 முதல் நிலம் கையகப்படுத்தும்பணி 14 ஆண்டுகளாக தொடர்கிறது. அதை விரைவாக நடத்த வேண்டும். 24 மணி நேரம் செயல்பாடு வந்துவிட்டது. அடுத்து இரவு விமானங்கள் விரைவில் வரவேண்டும். உள்நாட்டில் புனே, கோால்கட்டா, வாரணாசி உள்ளிட்ட நகரங்களுடன் விமான சேவை இணைக்கப்பட வேண்டும். வெங்கடேசன் எம்.பி.:
25 ஆண்டு கனவு நனவாகி உள்ளது. விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகனை தென்மாவட்ட எம்.பி.,க்கள் 5 பேர் நேரில் சந்தித்து இன்று நனவாகியுள்ளது. இதற்கு 20 ஆண்டுகளாக அனைத்துத் தரப்பினரும் பங்கெடுத்துள்ளனர். ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.:
விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கான தடைகளை களைய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் இருந்து பெங்களூரு, கோவைக்கு கட்டணம் குறைவாக உள்ளது. மதுரைக்கு அதிகமாக உள்ளது. விமான சேவை அதிகரித்தால் கட்டணம் குறையும் என்கின்றனர். அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அசோகன், எம்.எல்.ஏ.,:
மதுரையில் ஜம்போ ஜெட் விமானங்கள் வந்து செல்லும் வகையில் ரன்வேயை அதிகரிக்க, ரிங்ரோட்டை விரைவாக மாற்றி அமைக்க வேண்டும். சென்னை - துாத்துக்குடி இடையே தினமும் 7 விமானங்கள் செல்கின்றன. ஆனால் மதுரைக்கு 5 தான் வருகிறது. மதுரைக்கு பெரிய விமானங்கள் வந்து செல்ல வேண்டும். அவசரமாக சென்னை செல்ல வேண்டுமெனில் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். இதை குறைக்க வேண்டும். கலெக்டர் சங்கீதா:
விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்துள்ளது. அந்நிலங்களின் ஒருபகுதியில் ரோடு உள்ளது. அதனால் அதில் வேலியிட முடியவில்லை. மாற்றுப் பாதைக்காக இவ்விழாவுக்கு வரும் முன்பு கையெழுத்திட்டு ஏற்பாடு செய்துள்ளேன். கையகப்படுத்திய நிலப்பகுதியில் 2 நீர்நிலைகள் உள்ளன. அருகில் உள்ள வேறு நீர்நிலைகளை ஆழப்படுத்தி இவற்றுக்குப் பதிலாக அவற்றை மேம்படுத்த உள்ளோம். இதனால் மேற்கண்ட பிரச்னைகளுக்கு இம்மாதத்திற்குள் தீர்வு காண வாய்ப்பு உள்ளது.