உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை விமான நிலைய விரிவாக்கம்; நிலம் கையகத்திற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்

மதுரை விமான நிலைய விரிவாக்கம்; நிலம் கையகத்திற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் அவகாசம்

மதுரை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சின்ன உடைப்பில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிரான வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.சின்ன உடைப்பு மலைராஜன் உட்பட சிலர் தாக்கல் செய்த மனு:அயன்பாப்பாகுடியின் சின்ன உடைப்பு கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளன. விவசாயத்தை சார்ந்துள்ளனர். மதுரை விமான நிலையம் அமைக்க 1921ல் சின்ன உடைப்பு மேற்கு பகுதியில் எங்கள் நிலம் கையகப்படுத்தப்பட்டது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் (1997) சட்டப்படி எங்கள் நிலம், வீடுகள் அமைந்துள்ள பகுதியை கையகப்படுத்த நவ.23 ல் அரசு நோட்டீஸ் அனுப்பியது. பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிக்க இச்சட்டத்தில் வழிவகை இல்லை. ஏற்கனவே பலமுறை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எங்கள் பகுதியில் நிலம் கையகப்படுத்தியதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளோம்.தொழிலியல் நோக்கங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் (1997) சட்டப்படி எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற அரசு தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கு தடை விதிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்துவதில் நியாயமான இழப்பீடு வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றத்திற்கு வழிவகை செய்யும் (2013) சட்டப்படி மறுவாழ்வுக்குரிய ஏற்பாடுகள் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.2024 டிச. 5 ல் இரு நீதிபதிகள் அமர்வு நிலத்திலிருந்து மனுதாரர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்தது.நீதிபதிகள் ஜெ. நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று விசாரித்தது.விமான நிலைய ஆணையம் தரப்பு: நிதியாண்டு முடிவடையப்போகிறது. இதனால் திட்டப் பணிக்கு ஒதுக்கிய நிதி காலாவதியாகிவிடும். வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தது. நீதிபதிகள் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து விசாரணையை ஜூன் 4 க்கு ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை