| ADDED : பிப் 16, 2024 01:46 AM
மதுரை:மதுரை மஸ்தான்பட்டி அருகே குறிஞ்சி ரெசிடென்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், மாவட்ட பா.ஜ., செயலராக உள்ளார். வண்டியூர் பகுதியில் அரிசி மாவு மில் வைத்துள்ளார். நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மில்லில் இருந்து வண்டியூர் சங்கு நகர் வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ரிங்ரோடு அருகே அவரை நான்கு பேர் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தனர். அண்ணா நகர் போலீசார் விசாரித்தனர்.போலீசார் கூறியதாவது:முதற்கட்ட விசாரணையில் சக்திவேலிடம் பணியாற்றிய இரு ஊழியர்கள், தங்களுக்கு சம்பளம் தரவில்லை என்ற ஆத்திரத்தில் அவரை கொலை செய்தது தெரிந்தது. கொலை தொடர்பாக மதுரை செல்லுார் மருதுபாண்டி, 27, அவரது தம்பி சூர்யா, 24, கைது செய்யப்பட்டுள்ளனர்.சக்திவேலின் மாவு தயாரிப்பு தொழிலில் மருதுபாண்டி, ரஞ்சித்குமார் வேலை செய்தனர். மூன்று மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை.நேற்று முன்தினம் இரவு சக்திவேலிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை இருவருக்கும் சக்திவேல் 20 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். மீதி பணத்தை கேட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்றவர்கள் அவரை வெட்டிக்கொலை செய்தனர்.இவ்வழக்கில் மேலும் இருவரை தேடி வருகிறோம். சக்திவேல் மீது மிரட்டல், அரிசி கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.இவ்வாறு போலீசார் கூறினர்.பா.ஜ., ஆர்ப்பாட்டம்: பா.ஜ., செயலர் சக்திவேல் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மதுரை அரசு மருத்துவமனை முன், நகர தலைவர் மகா.சுசீந்திரன், பொதுச்செயலர் கருடகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.