மதுரை பைபாஸ் ரோடு பளிச்: அதிகாரிகளுக்கு சபாஷ் ஆக்கிரமிப்பு கடைகள் மீண்டும் உருவாகாமல் இருக்க நடவடிக்கை அவசியம்
மதுரை : மதுரையில் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கித்தவித்த பைபாஸ் ரோட்டிற்கு அதிகாரிகளால் விடிவு காலம் பிறந்துள்ளது. ரோட்டை ஆக்கிரமித்து ' நிரந்தர கட்டடம்' கட்டி இயங்கிய கடைகள் அகற்றப்பட்டன.மதுரையில் தொலைநோக்குப் பார்வையுடன் 50 ஆண்டுகளுக்கு முன் புறநகர் பகுதியாக இருந்த பகுதியில் ஆறுவழிச்சாலையாக பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. ஆண்டுகள் கடந்தபோது ரோட்டின் இருபுறமும் குடியிருப்பு பகுதிகள் அதிகரித்தன. கடைகள், வணிக நிறுவனங்கள் தேடி வரத் துவங்கின. 10 ஆண்டுகளாக ரோட்டோர கடைகளும், தள்ளுவண்டி கடைகளும் பைபாஸ் ரோட்டை ஆக்கிரமித்து விட்டன.மாநில நெடுஞ்சாலை ரோடு என்றாலும், அதன் அதிகாரிகள், மாநகராட்சி, போலீஸ் 'தலையீடு' காரணமாக ஆக்கிரமிப்பு கடைகள் பெருகின. இந்த ரோட்டில் மாநகராட்சி சார்பில் 11 கடைகள், டான் டீ மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கடைகளுக்கு தலா 4 என மொத்தம் 19 கடைகளுக்கே அனுமதி உள்ளது. ஆனால் பெரியார் பஸ்ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி துவங்கிய போது அங்கிருந்த சில நுாறு கடைகளுக்கு இங்கு தற்காலிக இடமளித்து நெரிசலை அதிகரித்துவிட்டனர். இதனால் அனுமதியற்ற கடைகள் பல நுாறை தாண்டும். தவிர வெள்ளிக் கிழமை வார காய்கறி சந்தையும் இடையூறு ஏற்படுத்தி வருகிறது.அவ்வப்போது அதிகாரிகள் கண்துடைப்பாக அவற்றை அப்புறப்படுத்தினாலும், அடுத்த நொடி புற்றீசல்களாக அவை முளைவிட்டு செயல்படத் துவங்கும். செயற்கையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு வராதா எனஇப்பகுதி வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் பெரும் ஏக்கத்துடன் எதிர்பார்த்தனர்.இந்நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினின் 'ரோடு ஷோ' மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இருவாரங்களுக்கு முன் முதல்வர் இந்த ரோட்டில் நடைபயணம் வருகிறார் என்றவுடன் அனைத்து அரசு இயந்திரங்களும் தடாலடி காட்டின. ரோட்டோர ஆக்கிரமிப்புகளை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வந்தன. நிரந்தர கட்டுமான கடைகள் உட்பட பலவற்றையும் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றனர். இதனால் ரோடு பளிச்சிட்டு அகலமானது. மின்இணைப்பு துண்டிக்கப்படுமா
அகற்றப்பட்ட கடைகளில் மின் இணைப்பு 'கட்' செய்யப்படாமல் உள்ளது. இதனால் மீண்டும் அந்த இடத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் உருவாக வாய்ப்புள்ளது. தற்போது கடைகள் செயல்படாததால் நெரிசலும், விபத்தும் குறைந்துள்ளது. இதற்கு காரணமான அரசு அதிகாரிகளுக்கு சபாஷ். இந்நிலை தொடர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.நெடுஞ்சாலை, மாநகராட்சி, போலீஸ், மின்வாரியம் உட்பட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து மீண்டும் கடைகள் வராமல் கண்காணிக்க வேண்டும். அனுமதித்த கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாத போடிலைன் ரயில்வே மேம்பாலத்தின் இருபுறமும் இடம் ஒதுக்கலாம். சந்தையை இடமாற்றலாம்
வெள்ளிக் கிழமை சந்தையை ஒரே இடத்தில் நடத்துவதற்கு பதில், ஒரு வாரம் ஒருபுறம் மறுவாரம் மற்றொரு புறம் என மாற்றி அமைக்கலாம். வாரம் ஒருபுறம் மட்டுமே தொடர்ந்து சந்தை நடப்பதால் அன்று அப்பகுதி கடைகளின் வியாபாரம் பாதிக்கிறது. நெரிசலை குறைக்க மக்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளதால் அந்த வாய்ப்பை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.