மேலும் செய்திகள்
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள்
31-Jul-2025
மதுரை : 'பிளஸ் 2 தேர்ச்சி பெற்றும் மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் குளறுபடியாக பதிவானதால் பொறியியல் கல்லுாரிக்கு வாய்ப்பு கிடைத்தும் செல்ல முடியாமல் தவிக்கும் மாணவி ஜெயஸ்ரீவுக்கு உடனே உதவுவதாக மதுரை கலெக்டர் பிரவீன்குமார் உறுதியளித்துள்ளார். மதுரை கொடிக்குளம் அரும்பனுார் புதுாரைச் சேர்ந்த ஆசைத்தம்பி மகள் ஜெயஸ்ரீ 18. மூன்றுமாவடி எல்.பி.என்., மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். 2024 ல் பிளஸ்2 ல் 327 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற அவருக்கு தனியார் பொறியியல் கல்லுாரியில் சீட் கிடைத்தது. கடந்த மேயில் கல்லுாரியில் சேர்ந்தார். இணையதளத்தில் அவரது மதிப்பெண் பட்டியலில் இவர் பிளஸ்1ல் இயற்பியல் தேர்வில் 'ஆப்சென்ட்' ஆனதால் தேர்வை எழுதவில்லை என்று பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிந்தது. அதனால் அவர் கல்லுாரியில் சேர தகுதியில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து முதன்மை கல்வி அலுவலகம், தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்து சரிசெய்யும்படி கூறினார். அதன்பின் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியலில் அவர் இயற்பியலில் தேர்ச்சி பெற்றதாக வந்தது. இதை கல்லுாரியில் காட்டியபோது, இணையதளத்தில் பிளஸ்1 இயற்பியலில் தேர்ச்சி பெற்றதாக இருந்தால்தான் சேர்க்க முடியும் என்றனர். இதையடுத்து இணையத்தில் மதிப்பெண் பட்டியலை சரிசெய்ய பலமுறை தேர்வுத் துறையில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மதுரை கலெக்டர் பிரவீன்குமாரை சந்தித்து மனு கொடுத்தார். மாணவி ஜெயஸ்ரீ கூறியதாவது: தந்தை பிரிந்து சென்றபின், தாய் கூலிவேலை செய்கிறார். குடும்பத்தில் முதன்முதலாக கல்லுாரி செல்கிறேன். ஆனால் தேர்வுத்துறை குளறுபடியால் உயர்கல்வி வாய்ப்பு பறிபோகிறது. ஆக.18க்குள் எனது மதிப்பெண் பட்டியலை சரிசெய்யாவிடில் இந்தாண்டும் படிக்க முடியாமல் போய்விடும். மதுரை கலெக்டரிடம் மனு கொடுத்தேன். அவர் அதிகாரிகளிடம் பேசி, விரைவில் சரிசெய்வதாக உறுதியளித்தார், என்றார். கலெக்டர் பிரவீன் குமார் கூறுகையில், ''மாணவியின் விண்ணப்பம், மதிப்பெண் பட்டியல் சென்னை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டோம். விரைவாக திருத்தம் செய்யப்பட்டு மாணவிக்கு தீர்வு காணப்படும்'' என்றார்.
31-Jul-2025