உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை

மதுரை : தீவிர சிகிச்சை பிரிவு மேம்படுத்தப்பட்டதால், அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் தரமான சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை அரசு ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவுக்கு தினமும் 500 முதல் 800 பேர் சிகிச்சை பெற வருகின்றனர். இவர்களில் 100 பேர் வரை உள்நோயாளிகளாக சேர்கின்றனர். இதில் 35 பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. இவர்களிலும் 5 பேருக்கு சிகிச்சை அளிக்க 'வென்டிலேட்டர்' கருவி தேவைப்படுகிறது. 2006க்கு முன்பு இவ்வசதிகள் இல்லாமல்தான் தீவிர சிகிச்சை பிரிவு செயல்பட்டது. நுரையீரல் சளிக்கட்டு, இருதய பாதிப்பு, மூளைக்காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்க, கண்காணிக்க அதிக வாய்ப்பின்றி இருந்தது. இதனால் இறப்பு விகிதமும் அதிகமாக இருந்தது.

தீவிர சிகிச்சையை மேம் படுத்த அப்போதைய கண்காணிப்பாளர் சிவகுமார், பேராசிரியர்கள் ஜி.கிருஷ்ணன், டி.ராஜகோபால் முயற்சி எடுத்தனர். ராஜாமுத்தையா மன்றம் அறங்காவலர் சேக்கப்பச்செட்டியார், குழந்தைகள் பிரிவை தத்தெடுத்தார். அவசர சிகிச்சை பிரிவையொட்டி ரூ. 15 லட்சம் செலவில் 8 படுக்கைகள், குளிர்சாதன வசதியுடன் தீவிர சிகிச்சை பிரிவு உருவானது. ரூ. 4 லட்சம் செலவில் தண்ணீர் வசதி, மோட்டார் வசதி, ரூ.1 லட்சம் செலவில் கழிப்பறை, சுகாதார பணியாளர் வசதி ஏற்படுத்தினர். அப்போதைய கலெக்டர் உதயசந்திரன் இவற்றை துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகம், அரசு ஆஸ்பத்திரி சார்பில் வென்டிலேட்டர் கருவிகள் நிறுவப்பட்டன. இதனால் 24 மணி நேரமும் அனுபவமிக்க டாக்டர்களின் கண்காணிப்புடன் குழந்தைகள் தீவிர சிகிச்சை பெற்றன.

எனவே இப்பிரிவுக்கு குழந்தைகளின் வருகையும் அதிகரித்தது. அதேநேரம் தீவிர சிகிச்சைக்கு அவர்களை அனுமதிக்க கூடுதல் வசதியும் தேவைப்பட்டது. எனவே அப்பிரிவை மேலும் மேம்படுத்த ராஜா முத்தையா மன்ற நிர்வாகம் மீண்டும் ரூ.10 லட்சம் வழங்கியது. குளிர்சாதன வசதி, 10 படுக்கைகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இரண்டு வென்டிலேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பிற வார்டுகளைவிட தூய்மையானதாக, தனியார் ஆஸ்பத்திரிக்கு இணையான சிகிச்சை பெற முடிகிறது. வருகை அதிகரிப்பு: கடந்த 2006க்கு முன் தீவிர சிகிச்சைக்காக 168 பேர் அனுமதிக்கப்பட்டனர். மேம்படுத்தப்பட்ட பின் 2007ல் இது 743ஆக அதிகரித்தது. 2008ல் 725, 2009ல் 833 ஆக அதிகரித்தது. தீவிர சிகிச்சை பிரிவில் 2010ல் 660 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 504 பேர் உயிர் பிழைத்துள்ளனர். இவர்களில் 220 பேருக்கு வென்டி லேட்டர் கருவி பயன்பட்டுள்ளது. இவர்களில் 17 பேர் வென்டிலேட்டர் கருவியால்தான் உயிர் பிழைத்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஆண்டுகளில் 70 சதவீத இறப்பு என்பது தற்போது 28.8 சதவீதமாக குறைந்தது. ''இறப்பு விகிதம் குறைய மேம்பட்ட வசதியே காரணம். இதேபோல பிறபிரிவுகளையும் மேம்படுத்தினால் தனியாருக்கு இணையான சேவை கிடைக்கும்,' என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ