| ADDED : செப் 09, 2011 01:33 AM
மதுரை : அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் உயர்நிலை பள்ளியில் மாற்று சான்றிதழ் வழங்காததற்காக நிறுத்தப்பட்ட 20 ஆதரவற்ற மாணவர்களை மீண்டும் சேர்க்க, மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால உத்தரவிட்டது. அழகர்கோவில் அக்ஷயா டிரஸ்ட் நிர்வாகி அமுதலட்சுமி தாக்கல் செய்த பொது நல வழக்கு:அக்ஷயா டிரஸ்ட் சார்பில் அனைவருக்கும் கல்வி திட்டத்தில் சிறப்பு பள்ளி நடத்தப்பட்டது. இந்தாண்டு பள்ளியை தொடர்ந்து நடத்த முதன்மை கல்வி அதிகாரி அனுமதி மறுத்து விட்டார். இப்பள்ளியில் 57 மாணவர்கள் படித்தனர். இவர்களில் 38 குழந்தைகள் குறவர் சமூகத்தினர். பள்ளி லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டதால், வேறு பள்ளிகளில் இவர்களை சேர்க்க முடியவில்லை. பின், 20 மாணவர்கள் மட்டும் சுந்தரராஜபெருமாள் அரசு உயர்நிலை பள்ளியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை சேர்த்து கொள்ளப்பட்டனர். இரு மாதங்கள் படித்த நிலையில், மாற்று சான்றிதழ் மற்றும் வயது சான்றிதழ் இல்லாததை காட்டி, 20 மாணவர்களும் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களை மீண்டும் சேர்த்து படிக்க உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.மனு நீதிபதிகள் பி.ஜோதிமணி, எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் அருள்வடிவேல்சேகர் ஆஜரானார். 20 மாணவர்களையும் உடனடியாக பள்ளியில் சேர்த்து, படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியருக்கு நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டனர். மனு குறித்து பதிலளிக்கவும் கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரி, தலைமையாசிரியருக்கு உத்தரவிடப்பட்டது.