மதுரை:மதுரை சிறையில் உதவி ஜெயிலராக இருப்பவர் பாலகுருசாமி. நேற்று மதியம், 12:00 மணியளவில் பணி நேரத்தில் ஆரப்பாளையம் ரோட்டில், 14 வயது சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவரிடம் சிறுமியின் சித்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பால் அடித்தார். தகவலறிந்து வந்த போலீசார், பாலகுருசாமியை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறியதாவது:மதுரை சிறையில் தண்டனை முடிந்து வெளியே வந்த கைதி ஒருவர், ஆரப்பாளையத்தில் டிபன் சென்டர் நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள். இரு மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகளின் 14 வயது மகள், தாத்தாவான முன்னாள் கைதியின் பராமரிப்பில் உள்ளார். டிபன் சென்டருக்கு அடிக்கடி வரும் பாலகுருசாமி, 3வது மகளிடம் தொடர்பில் இருக்க முயற்சித்தார். அப்பெண் சம்மதிக்காததால், சிறுமியிடம் மொபைல் போன் எண்ணை கொடுத்து தன்னிடம் பேசுமாறு கூறி உள்ளார்.சித்தியிடம் சிறுமி கூறினார். ஆத்திரமுற்ற சித்தி, பாலகுருசாமியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டார். நேற்று பணி நேரத்தில் பாலகுருசாமியிடம் சிறுமி போனில் பேசினார். அவரை ஆரப்பாளையம் ரோட்டில் ஒரு ஏ.டி.எம்., அருகே வருமாறு பாலகுருசாமி கூறினார். அங்கு சிறுமியை சந்தித்தவர், 500 ரூபாய் கொடுத்து, பாலியல் ரீதியாக பேசிக் கொண்டிருந்த போது, மறைவாக காத்திருந்த சித்தி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு செருப்பால் அடித்தார். இதனால் அவ்வழியே சென்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. இவ்வாறு கூறினர்.
அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர்
சில ஆண்டுகளுக்கு முன் மதுரை சிறையில் கைதியை பார்க்க வந்த மனைவியிடம், 'வாக்குறுதி' கொடுத்து அதிகாரி ஒருவரை அறை ஒன்றில் சந்திக்க செய்தனர். அப்போது அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அப்பெண், அங்கிருந்து தப்பி வந்து, ரோந்து போலீசாரிடம் புகார் செய்தார். கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்விவகாரத்தில் பாலகுருசாமி பெயரும் இடம்பெற்றது. நேற்றைய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது, ஓய்வு பெற்ற அந்த அதிகாரி போனில் தொடர்பு கொண்டு, இருதரப்பையும் சமரசம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன் சிறை காவலர்கள் குடியிருப்பில் பழம் விற்க வந்த பெண்ணுக்கும், காவலர் ஒருவரின் மகளுக்கும் பாலகுருசாமி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. சில அதிகாரிகளின் ஆதரவால் இவர் துறை ரீதியான நடவடிக்கையில் இருந்து தப்பி வந்ததாக சிறை காவலர்கள் கூறுகின்றனர்.