பயங்கரவாதிகள் தாக்குதலை கேள்விப்பட்டு காஷ்மீர் சென்ற மதுரைக்காரருக்கு மாரடைப்பு
மதுரை:காஷ்மீரில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பற்றி கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் அங்கு சுற்றுலா சென்ற மதுரைக்காரருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், சுற்றுலா பயணியர் 26 பேர் இறந்தனர். இந்த தாக்குதல் நடந்த நேரத்தில், பஹல்காமிற்கு மிக அருகே உள்ள சுற்றுலா இடத்தில், தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 68 பேர் இருந்துள்ளனர்.இவர்கள் பஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்திற்கு புறப்பட்டபோது, பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து, டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்து, அவர்கள் பயணித்த வேன் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக தமிழக சுற்றுலா பயணியர், ஸ்ரீநகருக்கு அழைத்து வர உத்தரவிடப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து கேள்விப்பட்டதும், மதுரையைச் சேர்ந்த பாலச்சந்தர், 60, என்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அதே மருத்துவமனையில், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகி, காயமடைந்த பலரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பாலச்சந்தர், அவரது மனைவியை தவிர, 66 பேரும் நேற்றே தமிழகம் திரும்பினர்.இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் நம் நிருபரிடம் கூறியதாவது:தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்கம் சார்பில், தமிழகம் முழுதும் இருந்து 25 பெண்கள் உட்பட 68 பேர் காஷ்மீருக்கு ஏப்., 19ல் ஐந்து நாள் சுற்றுலா சென்றோம். ஒருவேளை சில நிமிடங்கள் தாமதமாக தாக்குதல் நடந்திருந்தால், தமிழகத்தில் இருந்து சென்ற 68 பேரும் சிக்கி இருப்போம். நேற்று அப்பகுதியில், 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால், மற்றவர்களின் நிலையை வெளியே சென்று அறிய முடியவில்லை. தமிழக அரசு அறிவித்திருந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். 'நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பாக திரும்பி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.