உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநகராட்சி முறைகேடு புகார் மதுரை மேயர் பி.ஏ., மாற்றம்

மாநகராட்சி முறைகேடு புகார் மதுரை மேயர் பி.ஏ., மாற்றம்

மதுரை: மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு புகார் எதிரொலியாக மேயர் இந்திராணியின் நேர்முக உதவியாளர் (பி.ஏ.,) மாற்றப்பட்டார்.இம்மாநகராட்சியில் விதிமீறி ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு செய்தது தொடர்பான புகாரின் பேரில் முன்னாள் உதவி கமிஷனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.இதில் சம்பந்தப்பட்டதாக 5 தி.மு.க., மண்டலத்தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்களை ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.இம்முறைகேட்டில் மாநகராட்சி கமிஷனர் 'பாஸ்வேர்டு' முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் கணினி புள்ளிவிவர குறிப்பாளர் (ஏ.பி.,) ரவிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மேயர் பி.ஏ., பொன்மணியின் கணவர் என்பதால் அவர் மீது விசாரணையின்றி ராமேஸ்வரத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என அ.தி.மு.க., குற்றம்சாட்டியது.இதுகுறித்து மாநகராட்சி முறைகேட்டை கண்டித்து அ.தி.மு.க., நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்பட்ட ரவியிடம் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ வலியுறுத்தினார்.இதன் எதிரொலியாக மேயர் பி.ஏ., பொன்மணி மாற்றப்பட்டு, அவருக்கு பதில் மண்டலம் 5ன் உதவி வருவாய் அலுவலர் சித்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே மாமன்றச் செயலாளர் பொறுப்பை கூடுதலாக கவனித்துவந்த நிலையில், தற்போது பி.ஏ., பொறுப்பும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

நான்காவது பி.ஏ.,

மேயர் இந்திராணிக்கு இதுவரை முத்துராமலிங்கம், மரகதவல்லி, பொன்மணி என 3 பேர் பி.ஏ., வாக பணியாற்றி மாற்றப்பட்ட நிலையில் தற்போது சித்ரா 4வதாக பொறுப்பேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை