| ADDED : செப் 22, 2011 12:19 AM
மதுரை : மதுரை மாநகராட்சியில் சில வார்டுகளின் வாக்காளர் பட்டியலில் ஓட்டு எண்ணிக்கை கடந்த தேர்தலில் இருந்ததை விட குறைவாக இருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ஒன்பது லட்சத்து 91 ஆயிரத்து 504 ஓட்டுகள் இருப்பதாக முன்பு கூறிய நிலையில், பட்டியலில் ஒன்பது லட்சத்து 90 ஆயிரத்து 798 ஓட்டுகள் மட்டும் இருந்தன. குறைந்த 706 ஓட்டுகள் எந்த பகுதியில் விடுபட்டது என அதிகாரிகளுக்கு தெரியவில்லை. நேற்று முழுவதும் அதிகாரிகள் விசாரணை நடத்தியும், கண்டுபிடிக்க முடியவில்லை. வார்டு வாரியான வாக்காளர் பட்டியலிலும் நிறைய குளறுபடிகள் உள்ளன.மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு, பழைய வார்டுகளின் எண்கள் மட்டும் மாற்றப்பட்டன. வார்டுகளை மறுசீரமைப்பு செய்யாததால், வாக்காளர் எண்ணிக்கையில் வழக்கமாக மாற்றம் ஏற்படாது. ஆனால், தற்போதைய வார்டு வாக்காளர் பட்டியலில், முன்பு இருந்த வாக்காளர் எண்ணிக்கையை விட குறைவாக காட்டப்பட்டுள்ளது.மண்டலம் 1ல், இக்குளறுபடி அதிகம் உள்ளது. நடைமுறையில் ஐந்து ஆண்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இங்கு குறைந்திருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தும். சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடுவதாக எடுத்துக்கொண்டாலும், ஒவ்வொரு வார்டிலும் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் குறைந்தது வாக்காளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக வாக்காளர்களை கொண்டதாக 21வது வார்டு(பழைய 71) பெத்தானியாபுரம் இருந்தது. வாக்காளர் எண்ணிக்கை 22 ஆயிரத்துக்கும் அதிகம். இம்முறை அதே வார்டில் 21,109 வாக்காளர் மட்டும் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. விடுபட்ட வாக்காளர்களையும் கணக்கில் எடுத்தால், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.