மதுரை பள்ளிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்தது குண்டு மிரட்டல்: நேற்றும் 3 பள்ளிகளுக்கு மிரட்டல்
மதுரை : மதுரை பள்ளிகளுக்கு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்றும் 3 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.மதுரையில் கடந்த செப்.30ல் நரிமேடு கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட 4 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.அக்.2ல் சின்னசொக்கிக்குளம், காளவாசல், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரிங் ரோட்டில் உள்ள ஓட்டல்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இருநாட்களுக்கு முன் மதுரை மாவட்டம் பேச்சிகுளம் தனியார் பள்ளிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.4வது முறையாக அக்.8ல் கேந்திர வித்யாலயா பள்ளி உட்பட 3 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்று 5வது முறையாக புதுார் அல்அமின் நகரில் உள்ள தனியார் நடுநிலைப்பள்ளி, வீரபாஞ்சானில் உள்ள இரு தனியார் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.போலீசார் கூறியதாவது: தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மற்றவருடைய இமெயிலை 'ேஹக்' செய்து மிரட்டல் விடுக்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.செப்.30ல் வந்த மிரட்டல் குறித்து விசாரித்தபோது இங்கிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யாவில் இருந்து இமெயில் அனுப்பப்பட்டது தெரிந்தது. 2வது முறையாக வந்த மிரட்டல் அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.வெளிநாட்டில் வாழும் மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்றனர்.