உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை கடத்த முயற்சி வடமாநில நபர் சிக்கினார்

மருத்துவமனைக்குள் புகுந்து குழந்தையை கடத்த முயற்சி வடமாநில நபர் சிக்கினார்

மதுரை : மதுரை தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள் புகுந்து 4 வயது பெண் குழந்தையை ஆட்டோவில் கடத்த முயற்சித்த வடமாநில நபரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர்.மதுரை திருநகர் அமைதி சோலைநகரைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகளுக்கு குழந்தை பிறந்த நிலையில் மூத்த பேத்தியான 4 வயது பெண் குழந்தைக்கு காய்ச்சலுக்கு மருத்துவம் பார்க்க நேற்று மதியம் 12:30 மணியளவில் அரசரடியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார். ரத்தப்பரிசோதனை செய்ய டாக்டர் பரிந்துரைத்தார்.மெடிக்கல் லேப் விபரங்களை கேட்க செல்வி சென்றார். குழந்தை தனியாக இருந்தது. அப்போது 45 வயது வடமாநில நபர் குழந்தையிடம் பேச்சுக்கொடுத்து மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து வந்தார். அவ்வழியே சென்ற ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஏற முயன்றார். அப்போது சிறுமியையும், செல்வியையும் அழைத்து வந்த ஆட்டோ டிரைவர், சந்தேகப்பட்டு வடமாநில நபரிடம் விசாரித்தார். அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பொதுமக்கள் விரட்டிப்பிடித்தனர். பொதுமக்கள் 'கவனிப்பில்' இருந்து தன்னை காத்துக்கொள்ள அந்த நபர் தானாகவே தரையில் மோதி காயப்படுத்திக்கொண்டு 'மயங்கினார்'. எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர் காசி தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரித்தபோது, புரியாத மொழியில் பேசினார். பெயர் மட்டும் முன்னா என தெரிவித்தார். மாநிலம், ஊர் பெயர் விபரங்களை தெரிவிக்க மறுத்தார். அவரை முதலுதவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி