குப்பையால் குறுகிய மஞ்சமலை ஆறு * பாலமேடு மக்கள் பாவம்
பாலமேடு : பாலமேடு பேரூராட்சி குப்பைக் கிடங்கு அருகே குன்றாக குவிக்கப்படும் குப்பையால் மஞ்சமலை ஆறு குறுகிவிட்டது.வலையபட்டி மஞ்சமலையில் உருவாகும் காட்டாறு பல கிராமங்களை கடந்து ஓடையாக ஓடி வரும். மலை, கரட்டு பகுதியில் பலத்த மழை பெய்தால் வெள்ளம் பாயும். 10 ஆண்டுகளுக்கு பின் 2021ல் இரவில் இரு கரைகளையும் தொட்டு ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடியது. ஒரு மணி நேர நீரோட்டத்திற்கே பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதுடன், கண்மாய் குளங்களை நிரப்பியது.பாலமேடு வாடிவாசல் முதல் காளை சேகரிக்கும் பகுதிவரை 80 அடி அகலத்தில் ஆறு செல்கிறது. அதன்பின் ஓடையாக கூட இல்லாமல் கழிவுநீர் வடிகால் போல் 5 அடி அகலத்திற்கு குறுகிச் செல்கிறது. பேரூராட்சி நிர்வாகம் ஆற்றுக்குள் குறிப்பிட்ட துாரத்திற்கு குப்பை, கட்டட கழிவுகளை கொட்டி மேடாக ரோடு உயரத்திற்கு மாற்றியதே இதற்கு காரணம். கரைகள் உடைய, விவசாய நிலங்களுக்கு பிலாஸ்டிக் கழிவுகள் செல்ல வாய்ப்புள்ளது. இதனால் விவசாயம் மாசுபாடு அதிகரித்து விளைச்சலும் பாதிக்கும். இரவு, பகல் என எந்நேரமும் குப்பையை எரிக்கின்றனர். மஞ்சமலை ஆற்றை மீட்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்