| ADDED : ஜூன் 26, 2024 10:59 PM
மதுரை:'மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே பெண்ணை காதலித்ததற்காக தனது மகனை ஆணவக் கொலை செய்துள்ளதாக' பெற்றோர், உறவினர்கள் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் அழகேந்திரனை 21, மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே சிலர் கொலை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: அழகேந்திரன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இதனால் அப்பெண்ணின் உறவினர்கள் எனது மகனை எச்சரித்து மிரட்டியுள்ளனர். ஜூன் 24 இரவு 9:00 மணிக்கு எனது மகன் கள்ளிக்குடி உறவினர் வீட்டுக்குச் சென்றார். அவரை அப்பெண்ணின் உறவினர் ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். இரவு 11:00 மணிக்கு அவர் சொன்ன பஸ்ஸ்டாப்பிற்கு எனது மகன் சென்றுள்ளார். அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். மறுநாள் ஜூன் 25 ல் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தேன். அவர்கள் புகாரை வாங்க மறுத்து, கள்ளிக்குடி ஸ்டேஷனில் கொடுக்கும்படி தெரிவித்தனர். அதிகாலை 1:00 மணிக்கு கள்ளிக்குடி ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். அதனை வாங்க மறுத்து காலையில் வருமாறு கூறினர். ஜூன் 26 ல் வந்த அலைபேசி தகவலை தொடர்ந்து சத்திரப்பட்டி ஸ்டேஷனுக்கு சென்றபோது 'உனது மகன் உடல் வேலாம்பூர் கண்மாயில் கிடக்கிறது' என்றனர். ஆணவக் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்து இருந்தனர்.அழகேந்திரனின் தாய் மாரியம்மாள், தமிழ்ப்புலிகள் அமைப்பு நிர்வாகி பேரறிவாளன் கூறுகையில் ''அழகேந்திரன் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாகக் கூறினர். இதுவரை உடலை கண்ணில் காட்டவில்லை. இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் எத்தனை நாளானாலும் அவரது உடலை வாங்க மாட்டோம்'' என்றனர். ஒருவர் கைது
கோவிலாங்குளம் அழகேந்திரனை கடந்த 2 நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தேடி வந்த நிலையில் இவரது உடல் பேரையூர் தாலுகா வேலாம்பூர் கல்குவாரி அருகே தலை துண்டிக்கப்பட்டு கிடந்தது. சத்திரப்பட்டி போலீசார் விசாரித்தபோது பேரையூர் வெங்கடாசலபுரம் பிரபாகரனுடன் 28, இரண்டு நாட்களுக்கு முன் அழகேந்திரன் சென்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து கொலை தொடர்பாக பிரபாகரனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.