மாட்டுத்தாவணி, கே.கே.நகர் நுழைவு வாயில் விவகாரம்; உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு
மதுரை : மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நுழைவு வாயிலை அகற்ற நடவடிக்கை கோரிய வழக்கில், அது மட்டுமன்றி கே.கே.நகர் ஈ.வெ.ரா., நுழைவு வாயில் குறித்தும் அடுத்தவாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.மதுரை வழக்கறிஞர் ஜைனப்பீவி தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மாட்டுத்தாவணியில் எம்.ஜி.ஆர். பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட் அருகே நக்கீரர் தோரண நுழைவு வாயில் (ஆர்ச்) உள்ளது. அக்குறுகிய பகுதியை கடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது. மாநகராட்சி எல்லை உயர்நீதிமன்றம் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப நுழைவு வாயிலை வேறு இடத்திற்கு மாற்றலாம். நுழைவு வாயிலை அகற்ற வேண்டும் அல்லது மாற்றியமைத்து விரிவாக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: நக்கீரர் தோரண வாயிலை மாற்றியமைக்க அல்லது அகற்றிவிட்டு புதிதாக அதே இடத்தில் நிறுவ அனுமதி கோரி அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தாக்கல் செய்த மனு: எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது 1981ல் மதுரையில் 5வது உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அவ்வரலாற்றை நினைவு கூறும் வகையில் மாட்டுத்தாவணி உள்ளிட்ட சில இடங்களில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டன. அதை அறியாமல் மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இவ்வழக்கில் என்னையும் ஒரு தரப்பாக சேர்த்து எனது கருத்து அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். அவரது தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.அதில் நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.நீதிபதிகள்: போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாட்டுத்தாவணி தோரண வாயில் மட்டுமன்றி கே.கே.நகரில் உள்ள ஈ.வெ.ரா., தோரண வாயில் குறித்தும் செப்.23ல் உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு உத்தரவிட்டனர்.