மருத்துவர் வராததால் நடக்காத மருத்துவ மதிப்பீட்டு முகாம்
மதுரை: மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்த ஏற்பாடு செய்தும், மருத்துவர்கள் வராததால் முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் சிலநாட்களுக்கு முன் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் தயாளன் முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வட்டாரத்தில் முகாம் நடத்த திட்டமிட்டனர். இதன்படி திருமோகூர் அரசு நடுநிலைப் பள்ளியில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஏராளமான மாற்றுத்திறனாளி மாணவர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் மருத்துவர்கள் வராததால் முகாம் நடப்பது தடைபட்டது. இதனால் குழந்தைகளுக்கு அடையாள அட்டை பெறுவது, நலத்திட்டங்களை பெறுவது என்ற நோக்குடன் தொலைவில் இருந்து வந்த கூலித் தொழிலாளி பெற்றோர் பாதிக்கப்பட்டனர். சிலர் கூறுகையில், ''இன்று (டிச.9) டி.கல்லுப்பட்டியில் நடைபெறுவதாக இருந்த முகாமும் ரத்து செய்யப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது'' என்றனர். மருத்துவர்கள் வராததால் முகாம் ரத்தானது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.