சம்பளம் வழங்க பணிமதிப்பீட்டு சான்று மருத்துவ பணியாளர்கள் அதிருப்தி அரசுப் பணியாளர்கள் எச்சரிக்கை
மதுரை: பணிமதிப்பீட்டு சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையால் மனஉளைச்சலில் உள்ளதாக மதுரை மாவட்ட பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.மதுரை மாவட்டத்தில் 14 ஒன்றியங்களிலும் 50க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 90க்கும் மேற்பட்ட பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தினக்கூலியாக ரூ.720 வழங்கப்படுகிறது. வட்டார மருத்துவ அலுவலரிடன் கையொப்பம் பெற்ற பின்பே சம்பளம் வழங்கப்படும். இதுவே நடைமுறை. ஆனால் மதுரை மாவட்டத்தில் இவர்களை அந்தந்த மருத்துவமனை செவிலியர், வழிகாட்டு செவிலியர் (மென்டர்), மருத்துவ அலுவலர், வட்டார மருத்துவ அலுவலரிடம் பணிமதிப்பீட்டுச் சான்றிதழில் கையொப்பம் பெற்று வரும்படி தெரிவிக்கின்றனர். 4 அலுவலர்களிடம் கையெழுத்து பெறுவதற்குள் போதும், போதுமென்றாகி விடுகிறது. வேறு எந்த மாவட்டத்திலும் இதுபோன்ற நிலை இல்லை. இதனால் மனஉளைச்சலும், வேதனையும் அதிகரித்துள்ளதாக பன்னோக்கு பணியாளர்கள் புலம்புகின்றனர்.இப்பணியாளர்கள் இணைவிப்பு பெற்றுள்ள அரசுப் பணியாளர்கள் சங்கத்திடம் தெரிவித்தனர். அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜெயகணேஷ், மாவட்ட செயலாளர் முத்துராஜா ஆகியோர் கூறியதாவது: கீழ்நிலை பணியாளர்களான பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்களை, துணை இயக்குனர் அலுவலக அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். அவர்களின் வீடுகளில் சமைப்பது, துவைப்பது போன்ற அலுவல் தொடர்பில்லாத பணிகளை செய்ய கட்டளையிடுவதுடன் மிரட்டவும் செய்கின்றனர். அதிகார துஷ்பிரயோகம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராடும் நிலை உருவாகும் என்றனர்.