இயற்கை தீவனம் இன்றி பால் உற்பத்தி குறைவு
பேரையூர் : பேரையூர் பகுதியில் வறட்சியால் கால்நடைகளுக்கு இயற்கை தீவனம் கிடைக்காமல் பால் உற்பத்தி குறைந்ததால், மாடு வளர்ப்போர் கவலையில் உள்ளனர். பேரையூர் தாலுகாவில் விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதான தொழிலாக உள்ளது. கிராமப் பெண்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதில் கால்நடைகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆண்கள் சாகுபடிப் பணிகளைக் கவனித்துக் கொண்டாலும், இல்லத்தரசிகள் பலர் கால்நடைகளை வளர்த்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய நிலம் இல்லாதவர்களும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கால்நடைகளுக்கு தீவனங்களாக சோளத்தட்டைகள், வைக்கோல் வழங்குகின்றனர். சில விவசாயிகள் தீவனப் பயிர்களை தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகின்றனர். நிலம் இல்லாதோர் விலைக்கு வாங்குகின்றனர். கடந்த 5 மாதங்களாக வெயில் அதிகமாக உள்ளது. ஒரு மாத காலமாக காற்றின் வேகமும் அதிக அளவில் உள்ளதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. வறட்சியினால் கால்நடை தீவனங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. விவசாயிகள் கூறுகையில், ''வறட்சியால் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்கவில்லை. ஒரு மாட்டுக்கு தினமும் ரூ.400 வரை செலவழிக்க வேண்டியது உள்ளது. பத்து லிட்டர் பால் கொடுத்த பசு, தற்போது 5 லிட்டர் தருகிறது. இந்நிலை நீடித்தால் கால்நடைகளை விற்பதை தவிர வேறு வழி இல்லை என்றனர்.