ஐந்தாண்டுகளில் மதுரை தொழில் நகராகும் அமைச்சர் மூர்த்தி பெருமிதம்
மதுரை: ''முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில்முனைவோரை ஊக்குவித்து மதுரையின் தொழில் வளத்தைப் பெருக்க, கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ வழிவகுத்துள்ளது'' என அமைச்சர் மூர்த்தி பெருமிதம் தெரிவித்தார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் பி.என்.ஐ., பிரம்மாஸ் சார்பில் அனுஜ் டைல்ஸ் வழங்கும் கிராண்ட் பிரான்சைஸ் எக்ஸ்போ கண்காட்சி நடந்தது.அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில், ''இதுபோன்ற நிகழ்ச்சிகள் முதலீட்டாளர்களை ஈர்த்து மதுரையின் தொழில் வளத்தை பெருக்க வழிவகுத்துள்ளது. இளைய தலைமுறையினரை தொழில் முனைவோராக்க ஊக்குவிக்கிறது. பெண்கள் பலர் ஆர்வமுடன் பார்வையிட்டதை காணமுடிந்தது. பிரான்சைஸி எடுப்போர், வழங்குவோருக்குப் பாலமாக இக்கண்காட்சி அமைந்தது. இதனால் ஐந்தாண்டுகளில் மதுரை மிகப்பெரிய தொழில் நகரமாக மாறும்'' என்றார்.இதில் 60க்கும் மேற்பட்ட பிரான்சைஸி நிறுவனங்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்றனர். பல்துறை நிபுணர்கள் ஆலோசனைகள் வழங்கிய கருத்தரங்குகள் நடந்தன. மதுரை ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட், தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் மாணவர்கள் கண்காட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.மேயர் இந்திராணி பொன்வசந்த், வடக்கு மாவட்ட பொருளாளர் சோமசுந்தரபாண்டியன், வடக்கு மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, பி.என்.ஐ., பிரம்மாஸ் தலைவர் அறிவழகன், துணைத் தலைவர் மஸ்தான், செயலாளர் ராஜராஜா, மதுரை, சிவகங்கை, விருதுநகர் நிர்வாக இயக்குநர் ராஜரத்தினம் இளங்கோவன், மதுரை, சிவகங்கை மேலாண்மை இயக்குநர் ஹரி பிரசாத், நிர்வாகிகள் குணசேகரன், விவேக் பங்கேற்றனர்.