மேகாலயாவில் மாயமான தம்பதி பள்ளத்தாக்கில் கணவர் சடலம் மீட்பு
ஷில்லாங்: மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற தம்பதி திடீரென மாயமான நிலையில், உடல் சிதைந்த நிலையில் கணவர் சடலம் மீட்கப்பட்டது. மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, 30. இவரது மனைவி சோனம், 27; திருமணமாகி எட்டு நாட்களே ஆன புதுமண தம்பதி, தேனிலவுக்காக வடகிழக்கு மாநிலமான மேகாலயா சென்றனர். அங்கு கிழக்கு காசி மலை மாவட்டத்தில், தொடர்மழை பெய்யும் சிரபுஞ்சிக்கு சென்றனர். அங்குள்ள நான்கிரியாட் கிராமத்தில் விடுதியில் தங்கி தேனிலவை கொண்டாடினர். அங்கு வாடகை ஸ்கூட்டரில் மே 23ல் வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் விடுதி திரும்பவில்லை. அவர்களின், 'அலைபேசி சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தால், இருவரையும் தேடும் பணியை போலீசார் மேற்கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 20 கி.மீ.,தொலைவில் சோஹ்ரா பகுதி அருவிக்கரையில், ராஜா உடல் பாதி சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. தொடர்ந்து அவரது மனைவி சோனத்தை போலீசார் தேடுகின்றனர்.இதையடுத்து ராஜாவின் கையில் குத்தப்பட்டுள்ள டாட்டூ உதவியால் இறந்தவர் ராஜா என உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து பெண்ணின் வெள்ளை சட்டை, உடைந்த அலைபேசி மீட்கப்பட்டுள்ளதால், ராஜாவை கொன்ற கும்பல் சோனத்தை கடத்திச் சென்றார்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.