அடிப்படை வசதிகள் இல்லை
சோழவந்தான்; சோழவந்தான் அருகே மேலக்கால் தெற்குத்தெருவில் சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமப்படுவதாக அப்பகுதியினர் வேதனை தெரிவித்தனர். அன்னம்: இப்பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லாததால் கழிவு நீர் தெருவில் செல்கிறது. ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி தெரு முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் குழாய் சாக்கடையை ஒட்டியே அமைந்துள்ளதால் அங்கேயே குடிநீர் பிடிக்கும் அவலம் உள்ளது. சாக்கடை புழுக்கள் வெளியேறி வீடுகளுக்குள் செல்கின்றன. இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. தெருவிளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் செல்ல சிரமமாக உள்ளது. மேடு, பள்ளங்களில் தவறி விழுந்து பலர் காயம் அடைகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.