ரோடும் இல்லை, நீரும் இல்லை: புலம்பெயர விரும்பும் மக்கள் விரகனுார் வி.எல்.ஆர்., காலனியில் குமுறல்
மதுரை : மதுரை, விரகனுார் ஊராட்சி மகாராஜன் நகர், வி.எல்.ஆர்., காலனியில் ரோடே அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதுடன் அடிப்படை வசதிக்கு அல்லாட வேண்டியிருப்பதால் புலம் பெயர்ந்துவிடலாமா என்று பொதுமக்கள் எண்ணுகின்றனர்.இக்காலனியில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் கழிவு நீருக்காக அமைத்த தொட்டியை ரோட்டை மறைத்து கட்டியுள்ளதால், அவசர உதவிக்கும் வாகனங்கள் வர முடியாத அவலம் உள்ளது.முத்து முனியாண்டி கூறியதாவது: வி.எல்.ஆர்., காலனி கடைசி தெருவில் வசிப்பவர்கள் மூன்றாண்டுகளாக கஷ்டப்படுகிறோம். எங்கள் தெருவில் மட்டும் பேவர் பிளாக் கற்களை அமைக்காமல் தவிர்த்து விட்டனர். பஞ்சாயத்து அலுவலகத்தில் கேட்ட போது நிதி சரியாகிவிட்டது என்கின்றனர். இந்த பகுதி வாகனங்கள் வர இயலாத அளவு தாழ்வாக உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கூட வரவழியில்லை. குப்பை கொட்ட 300 மீட்டர் தாண்டிச் செல்ல வேண்டும். தெருவிளக்கு சரிவர எரியாததால், இரவில் திருட்டு பயம் உள்ளது. ரோடு வசதி இல்லாததால், யாரும் எங்கள் தெருவுக்குள் வருவதில்லை. இதனால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது போல் உள்ளது என்றார்.மலையான் கூறியதாவது: இப்பகுதியில் குடிநீர் சரியான நேரத்திற்கு வருவதில்லை. தண்ணீர் வரி கட்டியும், லாரிகளை எதிர்பார்க்கிறோம். மக்கள் அடிப்படை வசதிகளுக்கு அல்லாடுகிறோம். கழிவு நீர் தொட்டியை வீட்டின் முன்பு 4 அடி உயரத்தில், ரோட்டை மறைத்து அமைத்துள்ளனர். கழிவு நீர் வீட்டின் முன் தேங்கி சுகாதாரக் கேடை ஏற்படுத்துகிறது. தெருநாய்கள் குழந்தைகளை குறி வைத்து தாக்குகின்றன. இதனால் விளையாட அனுப்ப முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.