உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அவமதிப்பு வழக்கில் ஆஜராக நோட்டீஸ்

அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அவமதிப்பு வழக்கில் ஆஜராக நோட்டீஸ்

மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2021 முதல் பணிபுரிந்த அறநிலையத்துறை இணைக் கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இதற்கு சொந்தமாக கத்தப்பாறை, அதுார் பகுதியில் உள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.2019 அக்.,23 ல் நீதிபதிகள் அமர்வு,'நிலத்தை மீட்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நில விவகாரத்தில், கீழமை நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம். ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரத்தில் பாதிக்கப்படுவதாக கருதுவோர், ஆட்சேபனை இருப்பின் உரிய அதிகாரிகளிடம் நிவாரணம் தேடலாம்,' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால் அறநிலையத்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. சரியாக அரசு தரப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அதிருப்தியை நீதிபதிகள் வெளியிட்டனர்.நீதிபதிகள்: இக்கோயிலில் 2021 முதல் இணைக் கமிஷனர், செயல் அலுவலர், உதவி கமிஷனர்களாக பதவி வகித்தவர்கள் அக்.30 ல் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !