அழகர்கோவிலில் நவ.11 தைலக்காப்பு உற்ஸவம்
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஐப்பசி மாதம் நடைபெறும் தைலக்காப்பு உற்ஸவம் நவ.11 முதல் 13 வரை நடக்கிறது. முதல் இருநாட்களில் கோயிலுக்குள் அமைந்துள்ள மேட்டுக்கிருஷ்ணன் சன்னதியில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளுகிறார். நவ.13 மூன்றாம் நாள் காலை 7:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் உற்ஸவ பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு நுாபுர கங்கைக்கு மலைப்பாதை வழியாக செல்கிறார்.வழியில் உள்ள அனுமன் தீர்த்தம், கருட தீர்த்தம் பகுதிகளில் பெருமாளுக்கு விசேஷ பூஜை, தீபாராதனை செய்யப்படுகிறது. காலை 11:30 முதல் மதியம் 12:00 மணிக்குள் பெருமாளுக்கு தைலம் சாத்தப்பட்டு நுாபுர கங்கையில் திருமஞ்சனம் நடக்கிறது. பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை மலைப்பாதை வழியாக கோயில் இருப்பிடம் வந்து சேர்கிறார்.